Enable Javscript for better performance
MGR - 100|அடிமைப்பெண்ணில் எம்.ஜி.ஆருடன் நடித்த போது... ஜெயலலிதா!- Dinamani

சுடச்சுட

  

  எம்.ஜி.ஆருடன் நடித்த போது... ஜெயலலிதா!

  By வழக்கறிஞர் சி.பி. சரவணன்  |   Published on : 13th December 2017 04:14 PM  |   அ+அ அ-   |    |  

  000_ADIMAI_PEN_JAYALITHA

   

  உலகப் பொது மறையான திருக்குறளை நினைவுபடுத்தியது-புரட்சி நடிகர் அன்று என்னிடம் கேட்ட அந்தக் கேள்வி

  அவர் அப்படி என்னதான் கேட்டார் என்கிறீர்களா? ஆரம்பத்திலிருந்தே சொல்லுகிறேன்.

  “அடிமைப் பெண்’ வேடத்தில் நடித்த போது எப்போதும் போல, கதாநாயகி வேடம் என்று எண்ணி இருந்தேன். படத்தின் பூர்வாங்க வேலைகள் வெகு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. கதைக்கேற்ப வில்லியாக வேறு ஒருவரை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தார்கள். சொல்லப் போனால் எனக்கு அப்போது இரட்டை வேடம் அதில் கிடையாது.

  பின்னர், “உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி நீயே இரட்டை வேடம் ஏற்று இதில் நடிக்கிறாயா? என்று கேட்டார் எம்.ஜி.ஆர். சட்டென்று எனக்கு ஒரு திருக்குறள் தான் நினைவுக்கு வந்தது. 

  “கொக்கக்க கூம்பும் பருவத்து மற்றதான் குத்தொக்க சீர்விடத்து” என்ற வரிகளை எண்ணிக் கொண்டேன். இதைத்தான் முதலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

  இம்மாதிரியான சந்தர்ப்பம் வாய்க்காதா என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நான் இதை நழுவ விடுவேனா? முழு மனதுடன், மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டேன்.

  கதாநாயகி ஜீவா பாத்திரத்துடன், பட்டத்து ராணி பவளவல்லி (வில்லி) யாகவும் நடிக்கும் பெரும் வாய்ப்பை எம்.ஜி.ஆர் எனக்கு அளித்து விட்டார்.

  வில்லிக்காக ஒரு மானரிசம் (mannerism), அதாவது ஒரு தனிப்பட்ட சேஷ்டையைக் கைக்கொள்ளும்படியும் எம்.ஜி.ஆர் அப்போதே கூறிவிட்டார். அதற்காக வீட்டில் கண்ணாடி முன் நின்று ஒரு விசேஷ சேஷ்டையைப் பயிற்சி செய்தேன். நாலைந்து பாவனைகள் பழக்கத்துக்குக் கொண்டு வந்தேன்.

  அந்த பாவனை பயிற்சிகளை எம்.ஜி.ஆர் முன் நடித்துக் காட்டிய போது, அதில் ஒன்றை, இப்போது படத்தில் வரும் உதட்டை விரலால் வழித்து விடும் பாவனையைத் தேர்ந்தெடுத்தார்.

  “அடிமைப் பெண்” படம் வளரத் தொடங்கியது முதல், அதில் சில தனிச் சிறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. படக் காட்சியில் எல்லா அம்சங்களும் கலந்தாலோசனை செய்யப்பட்ட பிறகே காமிரவுக்குச் சென்றன. 

  தயாரிப்பில் பங்கு பெற்ற அனைவரிடமும் ஒரு தனி உற்சாகம் நிறைந்து இருந்ததையும் என்னால் உணர முடிந்தது. என்னைப் பொறுத்தமட்டில், நான் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட படத்தில் நடித்துவிட்டேன். ஆனாலும் ‘அடிமைப்பெண்’ணில் ஒவ்வொரு காட்சியிலும், நானே அனுபவித்து, ரசித்து நடித்தேன். என்னை அறியாமலே ஒரு தனி உற்சாகம் இதில் நடிக்கும் பொழுது ஒட்டிக் கொண்டுவிட்டது.

  “இப்படிச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் போல் தோன்றுகிறதே’ என்று சொன்னால் போதும் அதை உடனே ஏற்றுக் கொண்டுவிடுவார் எம்.ஜி.ஆர் அதற்கு ஒரு சான்றும் கூறுகிறேன்.

  ஜெய்ப்பூர் வெளிப்புறக் காட்சிக்காக சென்று அங்கு முகாம் செய்திருந்தோம். ஜெய்ப்பூர் அரண்மனையில், தர்பார் காட்சி ஒன்று அன்று படமாக்கப்பட்டது.

  பட்டத்து ராணி (வில்லி)யாக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். தர்பார் ஆசனத்தை விட்டுப் படி இறங்கி நடந்து வந்து, எதிர்க் கோடியில் கட்டப்பட்டிருக்கும் கதாநாயகனை நான் பார்க்க வேண்டும். படப்பிடிப்பு சமயத்தில் வில்லியாக வருகையில் எனக்கே இயல்பான, வழக்கமாக நான் மற்ற படங்களில் நடந்து வந்ததைப் போன்ற நடையில் நடந்து வந்தேன். காமிரா படமாக்கிக் கொண்டிருந்தது. டைரக்டரும் ஓ.கே சொல்லி, அந்த நடை காட்சியை முடித்து விட்டார்.

  இவ்வளவு முடிந்தும் நான் எம்.ஜி.ஆர் முகத்தை பார்த்தேன். அவர் முகத்திலே அந்தக் காட்சி நினைத்தபடி அமையவில்லை என்பதற்கான அதிருப்தி நிலவியதைக் கண்டு கொண்டேன். ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை.

  “டைரக்டர் சார், இன்னொரு டேக் எடுக்கிறீங்களா? என்று நானாகவே கேட்டேன். ஏனெனில், என் மனதுக்குள் வேறொரு “ஸ்டைலில்’ நடந்து காட்ட வேண்டும் என்று ஒரு ஆவல் எழுந்தது.

  மீண்டும் அந்த நடையலங்காரக் காட்சி படமாக்கப்பட்ட போது, முன் நடந்து வந்தது போல் நடக்காமல், என் கற்பனையில் உதித்த வேறொரு வகையில் ஒரு விசேட நடையை என் பாதங்கள் வெளிப்படுத்திற்று. எம்.ஜி.ஆர் முகத்தைப் பார்த்தேன். இப்போது மனநிறைவின் மகிழ்ச்சி அவர் முகத்தில் தோன்றியது. அதுமட்டுமல்ல உடனே அவர் என்னை அழைத்து, “இந்த நடை ரொம்பப் பிரமாதமாக இருக்கிறது. வில்லிக்கேற்ற அலங்கார நடையாக இருக்கிறது. படம் பூராவும், வில்லியாக வரும்போதெல்லாம் இதே நடையிலேயே நடந்து வந்துவிடு, என்று உத்தரவு போட்டு விட்டார். நடையில் மட்டுமல்லாமல், ஜீவாவாக வரும் போது, பவளவல்லியாக வரும் போது என் குரல்களில் கூட சிறிது வித்தியாசம் இருக்கும். படத்திற்கென்று அப்படி மாற்றம் செய்து கொண்டு நடித்திருக்கிறேன்.

  நடிப்பு, குரல் இரண்டையும் பற்றி சொல்லிவிட்டேன். இன்னும் சில குறிப்பிடத்தக்க அம்சங்களும் இதில் உள்ளன. அவற்றிலே முக்கியமாக உடை அலங்காரத்தைப் பற்றிச் சொல்லாமல் இருக்கலாமா? “அடிமைப் பெண்”ணில் வில்லியாக வரும்போது நான் அணிந்து வரும் ஆடைகள் அனைத்தும் புதுமையான பாணியில் தைக்கப்பட்டவை.

  அடுத்தது என்னைப் பாட வைத்த முதல் பெருமையும் இந்தப் படத்துக்குத் தான் சேரும். என்னைப் பாடச் சொன்ன போது முதலில் பயந்து தன்னம்பிக்கை குறைவாக இருந்ததால் நான் வாதாடினேன், பிறகு, எம்.ஜி.ஆர் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தைரியம் கூறிய பிறகே, இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் முன்பு தோன்றினேன்.

  இசைக்கு அடுத்ததாக நடனம். “இதில் ஏதேனும் புதுமையைச் செய்ய முடியுமா? என்று புரட்சி நடிகர் என்னிடம் கேட்டார். பலவித நடனங்கள் ஆடிவிட்டேன், பலபடங்களில் ஸ்பானிஷ், எகிப்திய நடன பாணிகளிலும் நடனங்கள் ஆடியிருக்கிறார்கள். இதில் மாற்றம் புதுமையைப் புகுத்துவது எப்படி? இந்தக் கட்டத்தில் நான் பார்த்த பல படங்களை என் மனக் கண்ணுக்குள் கொண்டு வந்து பார்த்தேன். நான் படித்த பல புத்தகக் குறிப்புகளும் நினைவில் பம்பரமாக சுழன்றன . தனிமையில் அமர்ந்து ஓயாமல் சிந்தித்தேன்.


  டிக் டிக் டிக்… என இதயத்துடிப்பு… டிக் டிக் துள்ளி எழுந்தேன். முரசு அதிர்ந்து நடனங்கள் ஆடப்படுவதுண்டு… முரசு அதிர்ந்து போர் பரணியும் புறப்படுவது உண்டு. படங்களில்... இந்தக் கட்டத்தில் முரசுகளையே சலங்கை போல் மேனியில் அணிந்து கொண்டு ஆடினால் என்ன? எப்படி இருக்கும்? “குட் ஐடியா” எனக்கு நானே சபாஷ் போட்டுக் கொண்டேன்.

  மறுபடியும் ஸ்டுடியோவுக்குச் சென்றபோது எம்.ஜி.ஆரிடம்; ”முரசு அணிந்து ஆடினால் புதுமையாக இருக்கும் என்றேன். “அப்படியே செய்ய்லாம்” என்று கூறியதோடு நிற்காமல், நடனப் பயிற்சி வல்லுனரான நடன மாஸ்டர் சோப்ராவையும் வரவழைக்குபடி ஆளை அனுப்பிவிட்டார் புரட்சி நடிகர். கூடவே கே.வி.மகாதேவனும் வரவழைக்கப்பட்டார்.

  ஆட்டம் பிறந்தது. கூடவே தனி விசேஷமானதோர் பின்னணி இசையும் பிறந்தது. மகாதேவன் கிளுகிளுப்பையும் புல்லரிப்பையும் இசையிலே எப்படியோ புகுத்திவிட்டார். அந்த இசை என்னை மேலும் உற்சாகத்துடன் நடனம் ஆட வைத்தது.

  ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள பாடல் காட்சிக்கான வீடியோவைக் காண...

   

  இப்படத்திலே நான் கதாநாயகனுக்கு சண்டை பயிற்சிகளும் சொல்லிக் கொடுத்து இருக்கிறேன். ஆமாம், எம்.ஜி.ஆருக்குத் தான் கத்திச் சண்டை, கோடரியில் சண்டை, ஈட்டிச் சண்டை, ஜூடோ சண்டை இத்தனையும் காமிராவில் பதிவாகும் முன் அவர் எனக்கு சொல்லித் தருவார், காமிரா படமாகும்போதோ, எம்.ஜிஆருக்கு நான் பயிற்சி தருவேன்.

  இது தான் திரை உலக விந்தை! “அடிமைப் பெண்’ படத்தில் என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்து, மகத்தான வாய்ப்புக் கொடுத்ததற்காக புரட்சி நடிகருக்கு என்றென்றும் நன்றி கூற கடமை பட்டிருக்கிறேன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai