Enable Javscript for better performance
MGR SPEECH 2|எம்.ஜி. ஆரின் சொற்பொழிவுத் துளிகள்-2- Dinamani

சுடச்சுட

  

  எம்.ஜி.ஆரின் சொற்பொழிவுத் துளிகள்-2

  By வழக்கறிஞர் சி.பி. சரவணன்  |   Published on : 23rd November 2017 06:05 PM  |   அ+அ அ-   |    |  

  solo2

   

  15.04.1976 'உன்னை விட மாட்டேன்’ படத் துவக்க விழாவில்...

  என்னை யார் பயன்படுத்திக் கொள்ள விரும்பினாலும் நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துகளை மக்களுக்கு அறவழியை, அன்பு வழியை, பண்பைச் சுட்டிக் காட்டுகின்ற கதைகளைப் படமாக்க வேண்டும். என்னையும், நாட்டையும் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கலைத்தொண்டுக்கு எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு என்னைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  அமரர் அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்ற எந்தத் துறையிலும் மனநிறைவோடு ஈடுபடவே நான் விரும்புகின்றேன்.

  இந்தப் படத்தில் பங்கு கொள்ள எத்தனை நாள் வேண்டும்? என்று கேட்டேன். பிரச்சினை இல்லாததால் நான் ஒப்புக் கொண்டேன்.
  கலை உலகில் எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை குறையக் கூடாது. ஆனால் இங்கு ஒற்றுமை உணர்வு குறைவாக இருக்கின்றது.

  21.10.1983 அமைச்சர் காளிமுத்து தம்பி வீரபாண்டியன் மணவிழாவில்...

  கலை நிகழ்ச்சியானாலும் சரி அல்லது வேறு எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, மக்கள் தங்கள் கவலைகளை மறக்கும்படி செய்ய வேண்டும். 2 அல்லது 3 மணி நேரம் மக்கள் தங்கள் கவலைகளை மறந்து மகிழத்தக்கதாக கலை இருக்க வேண்டும்.

  அதே சமயத்தில் அண்ணா சொன்னது போல், ஒரு பெரிய கருத்தையும் இணைத்துச் சொல்வதாகவும் இருக்க வேண்டும்.

  மணமக்கள் தங்கள் பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும். மூன்றாமவர் மத்தியஸ்தத்திற்கு இடம் தரக் கூடாது.

  1983-கமலஹாசன் நற்பணி மன்ற முதல் மாநாடு...

  ஒரு நடிகள் எப்படி இருக்க வேண்டும் என்றால் தாமரை இலையில் தாண்ணீர்த் துளிபோல் இருந்து, தனது நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். தாமரை இலையில் தண்ணீர்த்துளி அங்கும் இங்கும் உருளும், சூரிய ஒளிபட்டு வர்ண ஜாலங்களைக் காட்டும். அதே சமயத்தில் அது தாமரை இலையிலும் ஒட்டாது, அதுபோல் தான் நடிகர்கள் தங்கள் நடிப்பைக் காட்ட வேண்டும்.

  ரசிகர் மன்றங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பது முக்கியமல்ல. கட்டுப்பாடு தான் முக்கியம். ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மக்களோடு சேர்ந்து சேவை செய்ய வேண்டும்.
  ரசிகர் மன்றங்கள் தங்கத்தை உரசி தரம் அறிய உதவும் ‘உரைகல்‘ போன்றவை.

  27.01.1978 சென்னை, ராஜாஜி மண்டபத்தில் நடந்த ”கலைமாமணி’ விருது விழாவில்...

  சினிமாத் துறையில் இப்போது ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முத்தக்காட்சி தமிழ்ப்படத்தில் வர இருப்பதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது. தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலாச்சாரத்தைக் காக்கப் பாடுபடும் தொண்டன் என்கின்ற முறையில் கூறுகிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்க் கலாச்சாரத்துக்கு, பண்பாட்டுக்கு விரோதமான முத்தக்காட்சிகளை அனுமதிக்க முடியாது. தமிழ் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். எனவே தமிழ் நாட்டுக்குள் உள்ள கொட்டகைக்குள் தமிழ்ப்படங்கள் முத்தக் காட்சியுடன் திரையிடப்பட்டால் அது தமிழர் போராட்டமாக மாறிவிடும். தமிழ்க் கலாச்சாரத்தைக் காக்க, அண்ணா முதல்வராக இருந்த போது பேரணி நடத்தினார். ஆட்சிக்கு வந்துவிட்ட போதிலும், தமிழ்க் கலாச்சாரத்துக்கு ஆபத்து வரும் நேரத்தில் நானே முன் வந்து, மக்களை அழைத்து ஊர்வலம் போகும் நிலை ஏற்படும். சட்டம் பார்த்துக் கொள்ளும் என்று கூற நான் தயாராக இல்லை.

  1978- ‘இரட்டை மனிதன்’ படத் துவக்க விழாவில்...

  திரைப்பட உலகம் எந்திரத்தால் மட்டுமே இயக்கிவிடக் கூடியதல்ல, அனைவரும் உழைத்தாக வேண்டும். அனைவரின் முயற்சியினாலும் தான் இந்தத் திரைப்பட உலகை உயர்த்த வேண்டும்.

  15-4-1978 அன்று சென்னையில் நடைபெற்ற இந்திய - சோவியத் நட்புறவுக் கழகத்தின் 31-வது ஆண்டு விழாவில்...

  உறவு என்பது கொள்வினை, கொடுப்பினை என்பார்களே அதுபோல ஒருவர்க்கொருவர் இடையே உள்ள சொந்தத்தைக் குறிப்பதாகும். நட்பு என்பது அனுபவத்தில், பழக்கத்தில் ஏற்படுகின்ற தொடர்பைக் குறிக்கும்.

  இவரிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் என்ன லாபம் என்ற நினைப்பு வருமானால், அது உண்மையான நட்பாக அமையாது. அது சந்தர்ப்பவாத தன்னல உறவு, லாபநட்ட கணக்கு பார்ப்பது உண்மையான நட்பு இல்லை.

  எப்போதுமே பாராட்டிப் பேசுகிறவர்களிடமும், முகமன் கூறுகிறவர்களிடமும் நட்பு கொள்வது ஆபத்து. எப்போதுமே ஒருவனை பாராட்டிக் கொண்டிருந்தால் அவனுக்கு தலைக்கனம் வந்துவிடும். புகழ்ச்சி கேட்பதில் மகிழ்ச்சி ஏற்படும். அப்போது புகழாதவனைக் கண்டால், கோபமும் இகழ்ச்சியும் எரிச்சலும் ஏற்படும். பழி வாங்கலாமா என்று கூடத் தோன்றும், நட்பு முறிந்தாலும் பரவாயில்லை; தவறுகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் நல்லவனை நண்பனாகக் கொள்ளவேண்டும். இத்தகையவர்களுடன் ஏற்படும் நட்பு, அதன்பின் ஏற்படும் உறவு அது உயர்ந்த தத்துவமாக விளங்கும்.

  20.10.1963 இந்திய இதய இயல் கழகமும், நுரையீரல் மற்றும் இரத்தக் குழாய்கள் அறுவை மருத்துவ நிபுணர்கள் கழகமும் இணைந்து நடத்திய மாநாட்டில்...

  மருத்துவர் என்று வந்துவிட்டால் எதிரிக்கும் ஒரே சிகிச்சைதான், நண்பருக்கும் அதே சிகிச்சை தான்.

  சிகிச்சையின் தகுதியை நீங்கள் உயர்த்தும்போது, அதன் செலவைக் குறைக்க வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். தகுதியை உயர்த்துங்கள்; செலவைக் குறையுங்கள். அதற்குரிய வழியையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். வழியைக் கண்டுபிடிக்காமல் சிகிச்சையின் செலவைக் குறைக்க முடியாது. நீங்கள் உயிர் அளிக்கிறீர்கள்; நாங்கள் உணவு அளிக்கிறோம். மக்கள் உண்ண உணவினை நாங்கள் கொடுக்கிறோஒம். நீங்கள் உயிரைக் கொடுங்கள். உயிரைக் கொடுத்துவிட்டு, உணவின்றி வாழச் சொல்வது முறையாகாது. நான் இங்கே இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். நீங்கள் உழைக்கும் உழைப்பு நாட்டு மக்களை வாழ வைப்பதற்கு உதவும். நாட்டிற்குச் சேவை செய்யும் எங்களுக்கு உறுதுணை புரியும்.

  23.10.1983  பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் சிறந்த கலைஞர்கள், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிவு வழங்கும் விழாவில்...

  ‘கட்டுப்பாடு, நேர்மை, ஒழுக்கம்’ வேண்டும். கட்டுப்பாடு எனும் போது அதற்கு ஓர் எல்லை வேண்டும். ஒருவரை வற்புறுத்தி உட்கார வைப்பது கட்டுப்பாடு அல்ல.

  முன்பெல்லாம் நாடகக்காரர்கள் என்றால் வாடகைக்கு வீடு கூட கொடுக்க மாட்டார்கள். இன்று கலைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருமை அறிஞர் அண்ணா உருவாக்கியது. அதற்கு அவர் பாலமாக இருந்து செயல்பட்டார்.

  இந்திய சுதந்திர தினத்தன்று நியூயார்க்கிலிருந்து...

  ஒற்றுமையும், முயற்சியும், உழைப்பும் இல்லாமல் முன்னேற்றம் இல்லையென்பதை முன்னேறிய நாடுகளின் வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. 

  வன்முறை, வெறித்தனம், வதந்தி பரப்புதல், மக்களைப் பிளவுபடுத்துதல் இவற்றையே நோக்கமாகக் கொண்டுள்ள சீர்குலைவுச் சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்போம் என்று இன்று நாம் அனைவரும் சபதம் ஏற்றிடுவோம்.

  கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழி வகுப்போம்.

  புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்.

  “உழைப்பவரே உயர்ந்தவர்; உழைப்பே உயர்வு தரும்’ எனும் மூல மந்திரத்தை மனதில் இருத்தி ‘உழைப்பால் நாட்டை உயர்த்திட வாரீர்’ என இரு கரம் கூப்பி அழைக்கிறேன்.

  வாழ்க சுதந்திரம்! வாழ்க இந்தியா!

  அண்ணா நாமம் வாழ்க!

  30.11.68 ‘தீர்ப்பு நாடகப் பொன்விழாவில்...

  நான் ஒரு நாத்திகனா? இல்லவே இல்லை. என்னைப் பற்றி பலர் தவறாக இப்படி புரிந்து கொண்டு தவறாகவும் எழுதி வருகிறார்கள். உண்மையாக நான் நாத்திகன் அல்ல. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ‘ஒருவனே தேவன்’ என்ற கொள்கையை உடையவன் நான். நம் சக்தியை எல்லாம் மீறிய ஒரு சக்தி இருக்கிறது. அதைத் தான் நாம் கடவுள் என்று சொல்கிறோம். வழிபடுகிறோம். பலர் இந்தச் சக்திக்கு பல உருவம் கொடுத்துப் பெயர்கள் கொடுத்து கடவுளாக வணங்கி வழிபடுகிறார்கள். நான் என் தாயின் உருவத்தில் அந்தச் சக்தியை இப்போது வழிபட்டு வருகிறேன். அப்படியானால் நான் கோவிலுக்கு போனது கிடையாதா? போயிருக்கிறேன். ’மர்மயோகி’ படம் கோவை சென்ரலில் நடைபெற்ற போது நான் பழனி மலைக்குப் போய் முருகனை தரிசித்து வந்திருக்கிறேன்.

  தொடரும்...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai