28.2.1976: தமிழகத்தில் புது கல்விமுறை 4 ஆண்டு வரை அமலாகாது
தமிழகத்தில் புது கல்விமுறை 4 ஆண்டு வரை அமலாகாது என அறிவிக்கப்பட்டது பற்றி...


சென்னை, பிப், 26 - படிப்புக் கல்வியையும் தொழில் கல்வியையும் இரு கிளைகளாகக் கொண்ட புது கல்விமுறை சிரம நிதி நிலவரம் காரணமாக 1980-ம் ஆண்டுக்கு முன்பாக செயல்படுத்தப்படும் என்று தோன்றவில்லை' என்று அதிகாரபூர்வமாக தெரிகிறது.
புது கல்விமுறை பற்றி ஒரு உயர் அதிகாரக் கமிட்டியை தமிழ்நாடு அரசு நியமித்தது. 400 உயர்நிலைப் பள்ளிகளை உயர் செகண்டரி பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று அந்தக் கமிட்டி சிபாரிசு செய்தது. இவ்வாறு மாற்றுவதானால் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனுக்கும் ஒரு உயர் செகண்டரி பள்ளி ஆகும்.
அந்தக் கமிட்டியின் அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசு எந்த முடிவையும் இதுவரையில் எடுக்கவில்லை. பத்தாண்டு இடைநிலைக் கல்வி, இரண்டு ஆண்டு புகுமுகக் கல்வி, மூன்று ஆண்டு பட்டப்படிப்பு என்ற கொள்கையை தமிழ்நாடு அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.
புது கல்வி முறையைச் செயல்படுத்த பல கோடி ரூபாய் செலவாகும். தற்போதைய நிதி நிலவரத்தில் இது சாத்தியமாகாது.
புதிதாக எந்தக் கல்லூரியையும் வரவிருக்கும் கல்வியாண்டில் திறப்பதில்லை என்று நிர்வாகத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள். சென்ற ஆண்டில் கல்வி துறைக்காக ரூ. 170 கோடி செலவிடப்பட்டது. இந்த ஆண்டில் இந்த முதலீட்டில் அதிகரிப்பு எதுவும் இராது. ஆனால் சிறிது குறைப்பு இருக்கக் கூடும். ஏனென்றால் விவசாயம், பாசனம், மின்விசை போன்ற முன்னுரிமை துறைகளுக்கு பணம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 595 செகண்டரி பள்ளிகளில் படிப்புக் கல்வியும், தொழில் கல்வியும் இணைந்த படிப்பு முறை அமலில் உள்ளது. அது நீடிக்கும். சுமார் 20,000 மாணவர்கள் அம்முறையில் பயில்கிறார்கள். விவசாயம், தோட்டக்கலை, என்ஜினியரிங், மனையியல் உள்பட பாடங்களைக் கொண்ட ஏழு துறைகள் அந்த முறையில் இடம் பெற்றிருக்கின்றன. தொழில் படிப்புகளுக்கு வாரத்தில் 2 பீரியடுகள் முதல் 4 பீரியடுகள் வரை நேரம் ஒதுக்கப்படுகிறது.
இந்த முறையை தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் 50 சதவிகித பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.
மாணவர்கள் கல்வியில் வெவ்வேறு மட்டங்களில் படிப்பிலிருந்து நின்று விடுவதால் ஏற்படும் விரயத்தைத் தடுக்க இது அவசியம் என்று கருதப்படுகிறது. தொடக்கக் கல்விக் கட்டத்தைக் கூட முடிக்காமல் 50 சதவிகித மாணவர்கள் நின்றுவிடுகிறார்கள். மொத்தத்தில் 3 சதவிகித மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழக கல்வி வரையில் படித்து முடிக்கிறார்கள். ஆறாவது வகுப்பிலிருந்தே பள்ளியில் தொழில் கல்வியை கற்பித்தால் மாணவர்கள் அவ்வப்போது பள்ளிகளிலிருந்து நின்று விடுவது பெருமளவில் குறையும் என்று கருதப்படுகிறது.
உயர் செகண்டரி கல்வி மட்டத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகித மாணவர்களேனும் தொழில் கல்வி பயிற்சி பெறவேண்டும் என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...