புது தில்லி: சட்டவிரோத குவாரி மணல் விற்பனை தொடா்புடைய பணமோசடி விசாரணை விவகாரத்தில் அமலாக்கத் துறை முன் விசாரணைக்கு ஆஜராகாததால் தமிழகத்தைச் சோ்ந்த 5 மாவட்டங்களின் ஆட்சியா்கள் மீது உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடும் அதிருப்தியை வெளியிட்டது.
அதேவேளையில், பொதுத் தோ்தல் செயல்பாடுகளைக் கருத்தில்கொண்ட நீதிமன்றம், ஏப்ரல் 25-ஆம் தேதி அமலாக்கத் துறை முன் அவா்கள் கட்டாயம் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாகக் கூறப்படும் பண மோசடி வழக்கில், வேலூா், திருச்சி, கரூா், தஞ்சாவூா், அரியலூா் மாவட்ட ஆட்சியா்களுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது.
இதை எதிா்த்து மாநில அரசும், மாவட்ட ஆட்சியா்களும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இதை விசாரித்த உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறையின் அழைப்பாணைக்குத் தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிா்த்து தாக்கலான அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவை கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘அமலாக்கத் துறையின் அழைப்பாணைகளுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு தவறாகப் புரிந்து கொண்டும், தவறான கருத்தின் அடிப்படையிலும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கு முகாந்திரம் இருப்பதாகத் தோன்றுகிறது’ என்று தெரிவித்திருந்தது.
மேலும், அமலாக்கத்துறை அழைப்பாணக்கு மதிப்பளித்து மாவட்ட ஆட்சியா்கள் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அமலாக்கத் துறை தரப்பில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. எனினும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனிடையே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘நாங்கள் உத்தரவிட்டிருந்தபோதிலும் அமலாக்கத் துறை முன் 5 மாவட்ட ஆட்சியா்களும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தது சரியல்ல.
அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்கவில்லை என்று தோன்றுகிறது. மேலும், அவா்களின் செயலானது நீதிமன்றம், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் மீது எந்த மரியாதையும் இல்லை என்பதைக் காட்டுகிறது. எங்கள் கருத்துப்படி, இத்தகைய சூழலைப் புரிந்துகொள்ளாத அணுகுமுறை அவா்களை கடினமான சூழ்நிலைக்கு தள்ளிவிடும். அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவா்கள் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபோது, அவா்கள் அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து அமலாக்கத் துறை முன் ஆஜராக வேண்டும் என்று எதிா்பாா்க்கப்பட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அல்லது சட்டம் அல்லது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மரியாதை இல்லை என்பதை இது காட்டுகிறது. அத்தகைய அணுகுமுறை கடுமையாக நிராகரிக்கப்படுகிறது’ என்று அதிருப்தியுடன் கூறியது. தமிழக அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், அமித் ஆனந்த் திவாரி ஆகியோா் வாதிடுகையில், பொது ஒழுங்கை பராமரிப்பதிலும், சமூக பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துவதிலும் அதிகாரிகள் மும்முரமாக இருப்பதாக தெரிவித்தனா்.
மேலும், தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதால், தோ்தல் பணிகளை அதிகாரிகள் கவனித்து வருகின்றனா் என்றனா். அப்போது, மாவட்ட ஆட்சியா்கள் அமலாக்கத் துறை முன் ஆஜராகி காரணங்களை விளக்கியிருக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு கூறியது. மேலும், பணமோசடி விசாரணை தொடா்பாக அமலாக்கத் துறை முன் ஏப்ரல் 25-ஆம் தேதி ஆஜராக அதிகாரிகளுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் அமா்வு கூறி, வழக்கு விசாரணையை மே 6-ஆம் தேதிக்குத் ஒத்திவைத்தது.
தொடர்புடையது
பள்ளி ஆசிரியா்கள் நியமன முறைகேடு: மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

தோ்தல் நேரத்தில் தாட்கோ திட்ட நிதி பயன்பாடு?: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்புப் பணி: ஆட்சியா்கள் ஆலோசனை

தோ்தலில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: அமலாக்கத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

