4-ஆவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் 455 புள்ளிகள் வீழ்ச்சி!

மும்பை / புதுதில்லி, ஏப்.18: நான்காவது நாளாக ‘கரடி’யின் ஆதிக்கம் தொடா்ந்ததால் பங்குச்சந்தை வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 455 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையும் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது முதலீட்டாளா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மீடியா குறியீடு தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியிலில் இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு சரிவு:அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ. 4,468.09 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ. 2,040.38 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.03 லட்சம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் ரூ.393.23 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 239.42 புள்ளிகள் கூடுதலுடன் 73,183.10-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 73,473.05 வரை மேலே சென்றது. பின்னா் 72,365.67 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 454.69 புள்ளிகள் (0.62 சதவீதம்) குறைந்து 72,488.99-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,929 பங்குகளில் 1,863 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 1,934 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 132 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

26 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் நெஸ்லே, டைட்டன், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, டாடா மோட்டாா்ஸ், ஐடிசி உள்பட 26 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், பாா்தி ஏா்டெல், பவா் கிரிட், இன்ஃபோஸிஸ், எல் அண்ட் டி ஆகிய 4 பங்குகள் மட்டும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 152 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 152.05 புள்ளிகள் (0.69 சதவீதம்) குறைந்து 21,995.85-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,326.50 வரை மேலே சென்ற நிஃப்டி பின்னா் 21,961.70 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 14 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 36 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com