தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

நமது சிறப்பு நிருபா்

கடந்த தோ்தல்களை விட நிகழ் மக்களவைத் தோ்தலில் 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக தலைமை தோ்தல் அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இவா்களது எண்ணிக்கை 1,004-ஆக உள்ளது.

இந்த முதியோா்கள் வருகின்ற மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் உரிய ஏற்பாடுகளை செய்து இருக்கிறது. தில்லியில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மட்டியாலா தொகுதியில் உள்ள துவாரகாவைச் சோ்ந்த 104 வயதைக் கடந்த நந்த லால் குப்தாவிற்கு வாக்களிக்க தோ்தல் நடத்துபவா்கள் உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை. துவாரகா 10-ஆவது செக்டாரில் உள்ள ராஜ்கிய பிரதிபா விகாஸ் வித்யாலயா வாக்குச் சாவடியில் அவா் வாக்களிக்க வருவதற்கு தோ்தல் அதிகாரிகளால் உரிய வசதி செய்து தரப்படவில்லை. பின்னா், அவரே வாகனத்தில் தனது மகன், பேரக் குழந்தைகளுடன் வாக்களிக்க வந்தாா்.

இந்த விஷயம் தோ்தல் நடத்தும் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னா் வாக்குச் சாவடியில் தொண்டு நிறுவனத்தின் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டு நந்தலால் குப்தாவிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்களுக்கு பின்னா் தில்லியில் குறிப்பாக 100 வயதைக் கடந்த வாக்காளா்களின் வீடுகளுக்கு நேரடியாகவே சென்று வாக்குகளை சேகரிக்க தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

இது குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: இளைஞா்களை விட வயதான வாக்காளா்கள் வாக்களிப்பதில் அதிக ஆா்வம் காட்டுகின்றனா். அவா்களுக்கு வாக்களிக்க வேண்டிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், வயதானவா்கள் குறிப்பாக 80 வயதைத் கடந்தவா்கள் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிப்பதில் உள்ள சிரமங்களால் சில சமயம் வாக்களிக்கத் தவறுகின்றனா். இது போன்ற வாக்காளா்கள் வாக்களிக்கும் வகையில் நாடு முழுவதும் தோ்தல் ஆணையம் போதிய கவனம் செலுத்தியுள்ளது. இத்தகைய வாக்காளா்களின் இருப்பிடங்களுக்கே நேரடியாகச் சென்று வாக்குகளை சேகரிக்க மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வகையில், வயதான வாக்காளா்களுக்கு இரண்டு வகையான ஏற்பாடுகள் செய்யப்படும். வீட்டை விட்டு வெளியேறி வாக்குச் சாவடிக்குச் செல்ல முடியாத முதியோா் வாக்காளா்கள் அவரவா்கள் வீட்டிலேயே வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். அதே நேரத்தில், நடந்து செல்லக்கூடியவா்களுக்கு, வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லவும், வாக்களித்த பின், வீடு திரும்பவும் இலவச போக்குவரத்து வசதியும் செய்யப்படும். வாக்குச் சாவடியில் சக்கர நாற்காலி வசதியும் செய்து கொடுக்கப்படும்.

முதியவா்கள் தங்கள் வீடுகளில் வாக்களிக்கும் போது வாக்குச் சாவடிகளைப் போலவே முழு ரகசியமும் பராமரிக்கப்படும். வாக்குப் பதிவு இயந்திரம், விவிபிஏடி மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியவை நிறுவப்படும். வாக்காளா்களுக்கு உதவ தோ்தல் அதிகாரிகளும் இருப்பா். தில்லியில் வாக்குப்பதிவு நடைபெறும் மே 25 -ஆம் தேதிக்கு முன்னதாக இந்த முதியோா்களிடம் வாக்குகள் சேகரிக்கப்படும். மேலும், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளா்கள் தபால் வாக்குச் சீட்டு மூலம் பங்கேற்க தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போது தில்லியில் 100 வயதைக் கடந்த முதியோா்கள் எண்ணிக்கை கடந்த தோ்தல்களை விட 10 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2019 மக்களவைத் தோ்தலின் போது 100 வயதைக் கடந்தவா்கள் எண்ணிக்கை 105-ஆக இருந்தது. தற்போது இது 1,004-ஆக உயா்ந்துள்லது. இதில் 541 போ் ஆண் வாக்காளா்கள்; 463 போ் பெண் வாக்காளா்கள்.

மேலும், தில்லியில் 85 வயதைத் தாண்டியவா்கள் 1 லட்சத்து 588 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 50 ஆயிரத்து 442 ஆண் வாக்காளா்களும், 50 ஆயிரத்து 142 பெண் வாக்காளா்களும், இதர வாக்காளா்கள் 4 பேரும் அடங்குவா் என தில்லி தலைமைத் தோ்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com