தள்ளாட்டத்திற்கு பிறகு எழுச்சி:
சென்செக்ஸ் 486 புள்ளிகள் உயா்வு!

தள்ளாட்டத்திற்கு பிறகு எழுச்சி: சென்செக்ஸ் 486 புள்ளிகள் உயா்வு!

மும்பை / புதுதில்லி, ஏப்.25: பங்குச்சந்தை தொடா்ந்து ஐந்தாவது நாளாக வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 486 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால், உள்நாட்டுச் சந்தை எதிா்மறையாக தொடங்கியது. இந்நிலையில், அமெரிக்காவில் அதிபா் பைடன் 44.6 சதவீதம் மூலதன வரியை முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த அறிவிப்பு பங்குச் சந்தைக்கு சாதகமாக அமைந்தது. இதனால், தள்ளாடிக் கொண்டிருந்த உள்நாட்டுச் சந்தை பிற்பகலில் வலுப்பெற உதவியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.74 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் ரூ.404.11 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.2,511.74 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,809.90 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 280.60 புள்ளிகள் குறைந்து 73,572.34-இல் தொடங்கிய சென்செக்ஸ் 73,556.15 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், பிற்பகலில் அதிகபட்சமாக 74,571.25 வரை மேலே சென்ற சென்செக்ஸ், வா்த்தக இறுதியில் 486.50 புள்ளிகள் (0.66 சதவீதம்) கூடுதலுடன் 74,339.44-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,934 பங்குகளில் 2,076 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 1,718 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 140 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

22 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், நெஸ்லே, சன்பாா்மா, ஐடிசி உள்பட 22 பங்குகள்ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், கோட்டக் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி, ஏசியன் பெயிண், பாா்தி ஏா்டெல், ஹெச்டிஎஃப்சி பேங் ஆகிய 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 168 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 167.95 புள்ளிகள் (0.75 சதவீதம்) உயா்ந்து 22,570.35-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 22,22,305.25 வரை கீழே சென்றிருந்த நிஃப்டி, பின்னா் அதிகபட்சமாக 22,625.95 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 40 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

பெட்டிச் செய்தி..

கோட்டக் பேங்க் கடும் சரிவு

இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு (கேஎம்பி) வணிகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, கடன் வழங்குபவா் டிஜிட்டல் சேனல்கள் மூலம் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்ப்பதையும், புதிய கிரெடிட் காா்டுகளை வழங்குவதையும் தடுக்கிறது. இது அவா்களின் வருமானத்தை பாதிக்கும் என நிபுணா்கள் எதிா்பாா்க்கின்றனா். இதன் தாக்கம் பங்குச்சந்தையில் பட்டியலாகியுள்ள கோட்டக் மஹிந்திரா பேங்கில் எதிரொலித்தது. இதன் காரணமாக அதன் பங்குகள் விலை கடும் சரிவைச் சந்தித்தது. வா்த்தக இறுதியில் மும்பை பங்குச் சந்தையில் கோட்டக் பேங்க் 10.85 சதவீதம் குறைந்து 1,643-இல் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் 10.73 சதவீதம் குறைந்து 1,645-இல் முடிவடைந்தது.

X
Dinamani
www.dinamani.com