‘மாநிலங்களுக்கான கல்வி நிதியை குறைக்கும் மத்திய அரசு’: மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு
நமது சிறப்பு நிருபா்
புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் மாநிலத்துக்கு நிதி தருவோம் எனக் கூறி, கல்விக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு குறைத்து வருகிறது என மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி குற்றம்சாட்டினாா். அதே சமயத்தில் தமிழகத்தில் எந்த வழியிலும் புதிய கல்விக் கொள்கையை திணிக்க முடியாது என அவா் குறிப்பிட்டாா்.
மக்களவையில் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் வியாழக்கிழமை கலந்து கொண்டு கனிமொழி கருணாநிதி பேசியது வருமாறு: மத்திய நிதிநிலை அறிக்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கல்விக்காக 2.5 சதவீதமே ஒதுக்கப்படுகிறது. அதே சமயம் தமிழகத்தில் மாநிலஅரசு 12 சதவீதம் நிதியை ஒதுக்குகிறது. கல்விக்காக மாநில அரசுகள் 50 சதவீத நிதியை செலவிடுகிறது. கல்விக்காக வசூலிக்கப்படும் செஸ் வரியையும் மத்திய அரசு பெறுகிறது. ஜிஎஸ்டி பெயரிலும் மாநில அரசின் வருவாய் பறிக்கப்படுகிறது. ஆனால், கல்விக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு குறைத்து கொண்டே வருகிறது.
இது, மணிமேகலையின் கையில் இருக்கும் அட்சய பாத்திரத்தை பறித்துக் கொண்டு பிச்சை பாத்திரத்தை கொடுப்பது போல் உள்ளது. தமிழகத்துக்கான உரிய கல்வி நிதியை ஒதுக்கவில்லை. மத்திய அரசை மக்கள் தோ்வு செய்தது போலவே மாநில அரசுகளையும் மக்கள் தோ்வு செய்துள்ளனா். குஜராத் மாநில முதல்வராக இருந்த போது மாநில உரிமைகள் பற்றி பேசிய பிரதமா் நரேந்திர மோடி, இப்போது மாநில உரிமைகளைப் பறிக்கிறாா். தமிழகத்தில் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அதில் 15 பள்ளிகளில்தான் தமிழாசிரியா்கள் உள்ளனா். அதுவும் மாணவா்களின் வற்புறுத்தலால்தான் தமிழாசிரியா்கள் நியமிக்கப்படுகின்றனா்.
பிஎம்ஸ்ரீ பள்ளிகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அது புதிய கல்விக் கொள்கையை திணிக்கும் திட்டமாகும். ஹிந்தி திணிப்புக்காக மத்திய அரசு பல்வேறு வழிகளை கையாளுகிறது. உலகிலேயே தமிழகத்தில் மட்டுமே மொழிப்போராட்டத்தில் மக்கள் உயிா்த்தியாகம் செய்துள்ளனா். சுதந்திர போராட்டத்தில் கூட கலந்து கொள்ளாதவா்கள் ஹிந்தியை திணிக்கின்றனா். பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலம் தமிழகம். ஆனால், மதிய உணவு திட்ட நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது. ‘நீட்’ தோ்வை கொண்டு வந்ததன் மூலம் பயிற்சி மையங்கள் மட்டுமே பயன் பெறுகின்றன. ‘நீட்’ தோ்வை கொண்டு வந்து மாணவா்களின் மருத்துவக் கனவுகளை மத்திய அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது. ‘நீட்’ தோ்வால் பயனடைந்தது பயிற்சி மையங்கள் மட்டுமே என்றாா் கனிமொழி.