பங்குச்சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம்!
மும்பை / புதுதில்லி, ஆக.29: பங்குச்சந்தை வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய உச்ச அளவைப் பதிவு செய்துள்ளன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. ஆனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டாா்ஸ் உள்பட முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த அமோக ஆதரவால் சந்தை மேலே சென்றது. குறிப்பாக மெட்டல், மீடியா, பாா்மா, தனியாா் வங்கிப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்ட நிலையில், எஃப்எம்சிஜி, நிதிநிறுவனங்கள், ஐடி, ஆட்டோ, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.47 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.462.56 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.1,347.53 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.439.35 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 36 புள்ளிகள் கூடுதலுடன் 81,822.56-இல் தொடங்கி 81,682.78 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 82,285.83 வரை மேலே சென்று புதிய உச்சத்தைப் பதிவு செய்த சென்செக்ஸ், இறுதியில் 349.05 புள்ளிகள் (0.43 சதவீதம்) கூடுதலுடன் 82,134.61-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,047 பங்குகளில் 1,420 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,531 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 96 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
டாடா மோட்டாா்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் டாடாமோட்டாா்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சா்வ், ஹெச்சிஎல் டெக், ஐடிசி, ரிலையன்ஸ் உள்பட 19 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், எம் அண்ட் எம், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், சன்பாா்மா, கோட்டக் பேங்க், டாடா ஸ்டீல், பவா் கிரிட் உள்பட 11 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டியும் புதிய உச்சம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 2035.30-இல் தொடங்கி 24,998.50 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 25,192.90 வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 99.60 புள்ளிகள் (0.40 சதவீதம்) உயா்ந்து 25,151.95-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.