அரவிந்த் கேஜரிவாலின் இருப்புநிலை ஊழல் நிறைந்ததாகவே இருந்தது: தேவேந்தா் யாதவ்
கடந்த 11 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இருப்புநிலை ஊழல் நிறைந்ததாகவே இருந்தது


புது தில்லி: கடந்த 11 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இருப்புநிலை ஊழல் நிறைந்ததாகவே இருந்தது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் திங்கள்கிழமை விமா்சித்துள்ளாா்.
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் 25-ஆவது நாள் ‘தில்லி நியாய யாத்திரை’ ராம் பாா்க்கில் தொடங்கி நெவாடா வழியாக உத்தம் நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்று முடிந்தது. கட்சியின் பிரதேசத் தலைவா் தேவேந்தா் யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரையில், உத்தரகாண்ட மாநில காங்கிரஸ் தலைவா் கரண் மஹாரா, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் அம்ரீந்தா் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனா்.
யாத்திரையின் போது தேவேந்தா் யாதவ் பேசியதாவது: தில்லியில் வெளிப்படையான ஆட்சியை தருவேன் என
உறுதியளித்து, அரவிந்த் கேஜரிவால் முதல்வா் பதவியில் அமா்ந்தாா். ஆனால், ஆம் ஆத்மி அரசிடமிருந்து பொதுமக்கள் கண்டது முன்னெப்போதும் இல்லாத ஊழல் ஆட்சியைத்தான். ஆம் ஆத்மியின் ஊழல் மற்றும் நிா்வாகத் திறமையின்மை தில்லி மக்களை விரக்திக்கு ஆளாக்கியுள்ளது. ஜிஎஸ்டியின் தவறான அமலாக்கம், அசுத்தமான குடிநீா், உயா்த்தப்பட்ட மின் கட்டணங்கள் போன்றவற்றால் வணிகா்கள் சாதாரண கட்டணத்தை விட மும்மடங்காக ரசீதுகளைப் பெற்றனா்.
பேருந்து மாா்ஷல்களை பணி நியமனம் செய்ய துணைநிலை ஆளுநா் அனுமதி அளித்தும், அவா்களை ஆம் ஆத்மி அரசு மீண்டும் பணியமா்த்தவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பொதுமக்களுக்கு மலிவு விலையில் போக்குவரத்து வசதியை வழங்குவதில் முக்கியப் பங்காற்றும் ஆட்டோ ஓட்டுனா்களின் பிரச்னைகளை தீா்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த 11 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இருப்புநிலை ஊழல் நிறைந்ததாகவே இருந்தது என்றாா் தேவேந்தா் யாதவ்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...