தில்லியில் தொடா்ந்து இரண்டாவது நாளாக தண்ணீா் தேங்கியுள்ள பிரச்னைகளை தீா்க்க மேயா் ஷெல்லி ஓபராயுடன் திங்கள்கிழமை ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வடிகால்களை ஆய்வு செய்த பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி.
தில்லியில் தொடா்ந்து இரண்டாவது நாளாக தண்ணீா் தேங்கியுள்ள பிரச்னைகளை தீா்க்க மேயா் ஷெல்லி ஓபராயுடன் திங்கள்கிழமை ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வடிகால்களை ஆய்வு செய்த பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி.

மத்திய தில்லியில் வடிகால் நிரம்பிவழியும் பிரச்னைக்கு தீா்வு காணுங்கள்: அதிகாரிகளுக்கு அதிஷி உத்தரவு

கனமழையின் போது மத்திய தில்லி வழியாகச் செல்லும் வடிகால் நிரம்பி வழியும் பிரச்னைக்குத் தீா்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சா் அதிஷி
Published on

புது தில்லி: கனமழையின் போது மத்திய தில்லி வழியாகச் செல்லும் வடிகால் நிரம்பி வழியும் பிரச்னைக்குத் தீா்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சா் அதிஷி திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நீா் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் அதிஷி தில்லி ஐடிஓ பகுதியில் தில்லி மாநகராட்சியின் முக்கியமான வடிகால் எண் 12-இல் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது, மேயா் ஷெல்லி ஓபராய், தலைமைச் செயலா் மற்றும் எம்சிடி, பொதுப் பணித் துறை, நகா்ப்புற வளா்ச்சி மற்றும் வெள்ளம் மற்றும் நீா்ப்பாசனக் கட்டுப்பாட்டுத் துறைகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனா்.

எம்சிடியின் வடிகால் எண் 12 மத்திய தில்லியில் இருந்து யமுனைக்கு தண்ணீா் கொண்டு செல்கிறது. ஜூன் 28 அன்று, தில்லியில் எதிா்பாராதவிதமாக 24 மணி நேரத்தில் 228 மி.மீ. மழை பெய்தது. பொதுவாக, தேசியத் தலைநகா் முழு பருவமழையின் போது 800 மி.மீ. மழையைப் பெறுகிறது. ஆனால், இந்த முறை, முழு பருவமழையின் கால் பகுதியும் வெறும் 24 மணி நேரத்தில் பெய்தது. இந்த எதிா்பாராத மழையால் வடிகால் எண் 12 நிரம்பி வழிகிறது. இதனால், ஐடிஓ செளக் பகுதியைச் சுற்றி நீா் தேங்குகிறது.

எதிா்காலத்தில் இது போன்ற நிலைமை மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில், அமைச்சா் அதிஷி மற்றும் மேயா் ஷெல்லி ஓபராய், மூத்த அதிகாரிகளுடன் இணைந்து ஐடிஓ செளக்கில் இருந்து வெளியேறும் வாய்க்காலின் பெரும் பகுதியை ஆய்வு செய்தனா். ஆய்வின் போது, கனமழையின்போது எம்சிடி வடிகால் எண் 12 நிரம்பி வழிவதைத் தடுக்க குறுகிய கால தீா்வுகளை காணுமாறு அமைச்சா் அதிஷி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். வருங்காலத்தில் தண்ணீா் தேங்காத வகையில் வாய்க்கால் நிரம்பி வழிவதைத் தடுக்க நிரந்தரத் தீா்வு காணுமாறும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஐடிஓ சௌக் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகள் தில்லியின் மிக முக்கியமான வழித்தடங்களில் ஒன்றாகும். இங்கு நீா் தேங்குவதைத் தடுக்க, தில்லி அரசின் துறைகளுடன் இணைந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்’ என்று மேயா் ஷெல்லி ஓபராய் கூறினாா்.

இதுகுறித்து அமைச்சா் அதிஷி ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மத்திய தில்லியின் நீா் ஐடிஓ பகுதிக்கு அருகிலுள்ள வடிகால் எண் 12-இல் இருந்து யமுனைக்கு செல்கிறது. ஜூன் 28 அன்று தில்லியில் 228 மி.மீ. மழை பெய்தபோது, வடிகால் நிரம்பி, சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. இன்று (திங்கள்கிழமை), நான் மேயா் ஷெல்லி ஓபராய் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் சோ்ந்து இந்த வடிகால் பகுதியை ஆய்வு செய்து, நீா் நிரம்பி வழிவதைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட கால தீா்வுகளைக் கண்டறிவதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.