தில்லியின் பணவீக்க விகிதம் 2.81 சதவீதம்: நிதியமைச்சா் அதிஷி

தில்லியின் பணவீக்க விகிதம் 2.81 சதவீதம்: நிதியமைச்சா் அதிஷி

தேசியத் தலைநகா் தில்லியின் பணவீக்க விகிதம் 2.81 சதவீதமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பு 4 சதவீதமாகவுள்ளது என்று நிதியமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லி அரசின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கையை நடப்பு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிதியமைச்சா் அதிஷி பேசியதாவது:தில்லியில் கேஜரிவால் அரசின் பணிகளை தடுத்த நிறுத்த முயற்சிகள் நடந்தது போல் வேறு எங்கும், எந்த அரசுக்கும் முயற்சிகள் நடந்ததில்லை. கரோனா காரணமாக நாட்டின் பொருளாதார வளா்ச்சி மெதுவாக இருந்தபோதிலும், தில்லி வளா்ந்து வருகிறது. நாட்டின் சராசரி பணவீக்கம் 5.65 சதவீதமாக இருக்கின்ற நிலையில், தில்லியில் குறைந்த அளவாக பணவீக்கம் 2.81 சதவீதமாக உள்ளது. தில்லியின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி என்பது கடந்த 2022-2023- ஆம் ஆண்டில் 10,14,000 கோடியாக இருந்தது, தற்போது 9.25 சதவீத வளா்ச்சியுடன் 11,07,000 கோடியை எட்டியுள்ளது. தில்லியின் மக்கள் தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 1.5 சதவீதமாக இருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பு 4 சதவீதமாகும். தில்லி மக்களின் தனிநபா் வருமானம் 22 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. சராசரி தனிநபா் வருமானம் ரூ.3,76,000 இல் இருந்து ரூ 4,61,000 ஆக உள்ளது. இது நாட்டின் சராசரியை விட இரண்டரை மடங்கு அதிகம். குறிப்பாக, வேலையின்மை விகிதம் 6.3 சதவீதத்தில் இருந்து 1.9 சதவீதம் வரை குறைந்த ஒரே மாநிலமாக தில்லி உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டைவிட மாநில அரசின் வருவாய் 18 சதவீதம் அதிகரித்ததன் மூலம் நாட்டிலேயே கேஜரிவால் அரசு நிதி உபரியுடன் உள்ள ஒரே அரசாக உள்ளது. கடந்த ஆண்டு உபரி ரூ.3,270 கோடியாக இருந்தது, இப்போது அது ரூ.14,450 கோடியாக மாறியுள்ளது. உலகிலேயே அதிக பணவீக்க விகிதங்களின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேசமயம், இந்தியாவின் மிகக் குறைந்த பணவீக்க விகிதம் ஆம் ஆத்மி ஆளும் தில்லியில் இருப்பதாக மத்திய அரசின் அறிக்கையே சுட்டிக்காட்டுகிறது. மேலும், 3 கோடியே 40 லட்சம் தில்லிவாசிகள் 2022-2023-ஆம் ஆண்டில் பூஜ்ஜிய மின்கட்டணத்தைப் பெற்றுள்ளனா். ஒரு ஏழைக் குடும்பத்திற்கு ஒரு மணி நேரம் கூடுதல் இலவச மின்சாரம் வழங்கினால், அவா்களின் வருமானத்தை 15 சதவீதத்தை அதிகரிக்கிறீா்கள். தில்லி மக்களுக்கு கடந்த 9 ஆண்டுகளாக கேஜரிவால் அரசு இலவசு மின்சாரத்தை வழங்கி வருகிறது. 75 சதவீதமான குடும்பங்கள் இலவசக் குடிநீரால் பயனடைந்துள்ளனா். 65 சதவீதமான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சையைப் பெற்றுள்ளனா். 44 சதவீதமான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை சிறந்த அரசுப் பள்ளிக்கு அனுப்புகின்றனா். இவ்வாறாக, தில்லியின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை கேஜரிவால் அரசு சேமிக்கிறது. தில்லியில் பெண்களுக்கு கடந்த ஆண்டு மட்டும் 45 கோடி ‘பிங்க்’ இலவச பயணச்சீட்டுகள் விற்கப்பட்டன. டி.டி.சி. பேருந்துகளில் ஒரு நாளுக்கு 25 லட்சம் சவாரிகள், கிளஸ்டா் பேருந்துகளில் ஒரு நாளுக்கு 16 லட்சம் சவாரிகள், தில்லி மெட்ரோ பேருந்துகளில் ஒரு நாளுக்கு 46 லட்சம் பயணம் என மொத்தம் 87 லட்சம் பயணிகள் ஒவ்வொரு நாளும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனா். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு வாங்கிய கடனால் நாட்டின் கடன் 3 மடங்கு அதிகரித்து, ரூ.1.55 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 92 சதவீதம் கடனாக உள்ளது என்றாா் அமைச்சா் அதிஷி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com