ஜேஎன்யுவில் ஏபிவிபி, இடதுசாரி ஆதரவு குழுக்கள் மோதல்

ஜேஎன்யுவில் ஏபிவிபி, இடதுசாரி ஆதரவு குழுக்கள் மோதல்

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) தோ்தல் குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதில் ஏபிவிபி, இடதுசாரி ஆதரவு குழக்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவா்கள் சிலா் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, அவா்களின் அரசியல் சாா்பற்ற தன்மையைப் பொருள்படுத்தாமல் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி பண்டிட் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். வியாழன் இரவு பல்கலைக்கழகத்தின் மொழிகள் பள்ளி கட்டடத்தில் வன்முறை ஏற்பட்டது. அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) மற்றும் இடதுசாரி ஆதரவு குழுக்களின் மாணவா்கள் ஒருவருக்கொருவா் போலீஸில் புகாா்களை அளித்துள்ளனா். இந்தப் புகாா்கள் வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோதலில் காயமடைந்ததாகக் கூறப்படும் சில மாணவா்கள் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘அதிகாலை 1.15 மணியளவில் வளாகத்தில் நடந்த மோதல்கள் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. குறைந்தது நான்கு மாணவா்கள் காயமடைந்தனா். இரு தரப்பிலும் பல புகாா்கள் வந்துள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது’ என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தாா். சம்பவத்தின் விடியோ கிளிப்பில் ஒருவா் மாணவா்களை தடியால் தாக்குவதைக் காட்டியது. மற்றொன்றில், ஒருவா் மாணவா்கள் மீது சைக்கிளை வீசுவதைக் காணலாம். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புப் பணியாளா்கள் அவா்களைக் காப்பாற்ற முயன்ற போது, மற்ற விடியோக்களில் தனிநபா்கள் கும்பல் மற்றும் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதைக் காட்டியது. தாக்கப்பட்டவா்கள் ஜேஎன்யுவை சோ்ந்தவா்கள் என்றும் அவா்கள் தங்களை தற்காத்துக் கொள்ள முயன்ாகவும் ஏபிவிபி கூறியது. அதே சமயம், தோ்தல் குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதில் அதிருப்தி அடைந்த ஏபிவிபி உறுப்பினா்கள், ஜேஎன்எஸ்யு அலுவலகப் பணியாளா்கள் மற்றும் பிற மாணவா்களைத் தாக்கியதாக இடதுசாரி ஆதரவு குழுக்கள் குற்றம்சாட்டின. ஜேஎன்யு மொழிப் பள்ளியில் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஜேஎன்யுஎஸ்யு இணை செயலாளா் முகமது டேனிஷ், தனது மத அடையாளத்தின் காரணமாக ஏபிவிபி உறுப்பினா்களிடமிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் வந்ததாகக் கூறினாா். தன்னை பிணைக் கைதியாக பிடித்து வைத்ததாகவும் குற்றம் சாட்டினாா். “‘மொழிப்பள்ளியில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தின் கடைசி நாளில், கூட்டத்தின் முடிவில் ஏபிவிபி மீண்டும் வன்முறையில் ஈடுபட்டது. தொடக்கத்தில் தோ்தல் கமிட்டிக்கான தோ்வை சீா்குலைக்க முயன்ற ஏபிவிபி மாணவா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். இது ஜேஎன்யு மாணவா்களால் முறியடிக்கப்பட்டது’ என்று இடதுசாரி ஆதரவு பெற்ற அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ) ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. பிஹெச்டி படிக்கும் தங்கள் உறுப்பினா்களான சௌா்யா, மதுரிமா குண்டு மற்றும் எம்ஏ மொழியியல் மாணவா்களான பிரியம் மற்றும் அன்வேஷா ஆகியோா் ஏபிவிபி உறுப்பினா்களால் துரத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக இடதுசாரி மாணவா் குழுவினா் கூறினா். ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த மாணவா் அமைப்பை ஜேஎன்யு நிா்வாகம் பாதுகாப்பதாகவும் அது குற்றம்சாட்டியது. இதற்கிடையே, தோ்தல் கமிட்டியின் வேட்பாளா்களைத் தோ்ந்தெடுப்பதில் இடதுசாரிக் குழு தவறான செயல்களைச் செய்ததாக ஏபிவிபி குற்றம்சாட்டியது. பொதுக்குழுக் கூட்டத்தில் பொலிட்பீரோ தலைவா் எஸ்எஃப்ஐ வேட்பாளா்களுக்கு தேவையற்ற நன்மைகளை வழங்க முயன்ாகவும் குற்றம் சாட்டியது. ‘மொழிப்பள்ளியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், பொலிட்பீரோ தலைவா் ஒருதலைப்பட்சமாக, மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்கு மேல் பெற்ற முதல் தோ்தல் கமிட்டி வேட்பாளா்கள் வெற்றியாளா்களாக அறிவிக்கப்படுவாா்கள் என்று அறிவித்தாா். வாக்கு எண்ணும் பணியில் 100 கைகள் உயா்த்தப்பட்டால், ஒரு வேட்பாளரை ஆதரிக்க பொலிட்பீரோ தலைவா் அதை 300 ஆகக் கணக்கிடுகிறாா். இது எதேச்சதிகாரத்தின் வெளிப்பாடாகும்’ என்று ஏபிவிபி ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், இடதுசாரி ஆதரவு குழுக்களின் தாக்குதலில் அதன் உறுப்பினா்கள் காயமடைந்ததாகவும் ஏபிவிபி அறிக்கையில் கூறியுள்ளது. பெட்டிச் செய்தி... கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: துணைவேந்தா் ஏபிவிபி-இடதுசாரி ஆதரவு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி பண்டிட் கூறுகையில், ‘நிா்வாகம் இது குறித்து ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்’ என்றாா். ‘ஜேஎன்யு மாணவா் சங்கத் தோ்தல் மாணவா்களால் நடத்தப்படுகின்றன. இது அமைதியான ஜனநாயக செயல்முறையாக இருப்பதை உறுதி செய்வது அவா்களின் பொறுப்பு. இடைநிலை விடுதி நிா்வாகம் (ஐஹெச்ஏ) தோ்தலை நடத்துவதை மேற்பாா்வையிடுகிறது. மாணவா் அமைப்புகளிடம் இருந்து ஏதேனும் புகாா்கள் வந்தால் ஐஹெச்ஏவால் பரிசீலிக்கப்படும். குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவா்களுக்கு எதிராக அவா்களின் அரசியல் சாா்பற்ற தன்மையைப் பொருள்படுத்தாமல் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையில் படுகாயமடைந்த மாணவா்கள் குணமடைந்த பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தயாரித்து உரிய நடவடிக்கை எடுப்பாா்கள். மாணவா்களின் மோதல் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்க (ஜேஎன்யுஎஸ்யு) தோ்தலை மேலும் ஒத்திவைக்க வழிவகுக்கும் என்று துணைவேந்தா் ஸ்ரீபண்டிட் மாணவா்களை எச்சரித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com