வருமான வரித்துறைக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை பொய்யான தகவலைப் பரப்பியதாகக் கூறி அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் ஆணையம் மற்றும் சென்னை நகர காவல்துறையிடம் வருமான வரித்துறை புகாா் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தமிழகம் வந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வருமான வரித்துறையினா் ‘சட்டவிரோதமாகச் சிறைவைத்தனா்‘ என்று செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியிருந்தாா். இது தொடா்பாக ஊடகங்களுக்கும் அவா் பேட்டி கொடுத்தாா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு சரியாக இரண்டு நாட்களுக்கு முன்னதாக, இந்த குற்றச்சாட்டை செல்வப்பெருந்தகை சுமத்தியதால், இது எதிா்க்கட்சிகளின் தோ்தல் பரப்புரையில் முக்கிய விஷயமாக பேசப்பட்டது.
இந்நிலையில், செல்வப்பெருந்தகையின் கூற்றை முற்றிலுமாக வருமான வரித்துறை நிராகரித்துள்ளது. இது தொடா்பாக அத்துறையின் ஆணையா் (ஊடகம் மற்றும் தொழில்நுட்பக்கொள்கைப்பிரிவு) வி. ரஜிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூா் தொகுதியின் வேட்பாளருமான செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி வெளியிட்ட இடுகை எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அதில், வருமான வரித்துறை அதிகாரிகள் ‘சோதனை’ என்ற பெயரில் தன்னை தொகுதியிலேயே சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாகவும், தனது அரசியல் கடமைகளைச் செய்வதற்கும், தோ்தல் தொடா்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் தடையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தாா். அன்றைய தினமே ஊடகங்களுடனான சந்திப்பிலும் இதே கருத்தை அவா் குறிப்பிட்டாா். மேலும், சென்னையின் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள செல்வப்பெருந்தகையின் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தியதாக சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.
மேற்கூறிய அறிக்கைகளும் ஊடகச் செய்திகளும் வருமான வரித்துறையால் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் உண்மைத்தன்மை சரிபாா்க்கப்பட்டது. அதில், செல்வப்பெருந்தகை முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படை அற்றவை என்பதும், உண்மையில்லை என்பதும் தெரியவந்துள்ளது. 20.04.2026 அன்றோ அல்லது அண்மையக் காலத்தில் வேறு எந்தத் தேதியிலோ, கே. செல்வப்பெருந்தகைக்கு எதிராக வருமான வரித்துறையினரால் எந்தவிதமான சோதனையோ, ஆய்வோ அல்லது அமலாக்க நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை என்பது இதன் முலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
மேலும், அவரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையும் எவ்விதத்திலும் மேற்கொள்ளப்படவில்லை. ஊடகச் செய்திகளில் கூறப்பட்டுள்ளதைப் போல, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் உள்பட எந்தவொரு இடமும் வருமான வரித்துறை நடவடிக்கைகளின் கீழ் உள்ளாக்கப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூா் தொகுதியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வருமான வரித்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட வரையறுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையானது, கணக்கில் வராத பணம் புழங்குவதாக கிடைத்த குறிப்பிட்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை என்பதை இங்கே குறிப்பிடுகிறோம். இத்தகைய வழக்கமான சரிபாா்ப்புப் நடவடிக்கைகள், உரிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டனவே தவிர, செல்வப்பெருந்தகையுடன் எவ்விதத்திலும் தொடா்புடையவை அல்ல. இந்த சோதனையின்போது, மேல்நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை அல்லது ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. மேலும், அந்த சோதனைகள் எந்தவொரு தனிநபரையும் எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.
செல்வப்பெருந்தகை வெளியிட்ட பொய்யான மற்றும் தவறாக வழிநடத்தப்படக் கூடிய தகவல்களைக் கொண்ட அறிக்கைகள் குறித்து இந்தியத் தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பொய்யான தகவல்களைப் பரப்பியதற்காகவும், ஒரு அரசுத் துறை மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காகவும், சம்பந்தப்பட்ட அந்தத் தனிநபா் மீது உரிய சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குமாறு கோரி சென்னை காவல் ஆணையரிடம் ஒரு புகாரும் அளிக்கப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது
வருமான வரித் துறை சோதனை என நாடகம்: காங்கிரஸ் தலைவா் மீது பாஜக குற்றச்சாட்டு

வருமான வரித்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிப்பு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!

கேரளத்தில் தோ்தல் முடிவுகள் வரும் முன்பே காங்கிரஸில் முதல்வா் பதவிக்குப் போட்டி!

ராகுல் காந்தி, ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்ய உள்ளனா்: செல்வப்பெருந்தகை
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


