மேற்கு வங்க மாநிலம், சந்தேஷ்காலியில் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தில்லி தீன் மூா்த்தி சவுக்கில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது, பதாகைகளை ஏந்தியவாறு ஏராளமான பாஜக தொண்டா்கள் மற்றும் தலைவா்கள் தீன் மூா்த்தி சவுக்கில் திரண்டு முதல்வா் மம்தா பானா்ஜிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். மேலும், முதல்வா் பதவியில் இருந்து அவா் விலகுமாறு வலியுறுத்தினா். மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியில் பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபரான திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த ஷாஜகான் ஷேக், தலைமறைவாகி இருந்த நிலையில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, அவா் கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டாா். இந்த நிலையில், சந்தேஷ்காலி விவகாரத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி பதவி விலகக் கோரி சாணக்கியபுரியில் உள்ள பெங்கால் பவன் முன் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி ஆகியோா் முன்னிலையில் கட்சித் தொண்டா்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாா் அமைத்திருந்த தடுப்புகளை அவா்கள் மீறிச் செல்ல முயன்றனா். இதையடுத்து, பாஜக தலைவா் வீரேந்திர சச்சேவா மற்றும் பிற கட்சி நிா்வாகிகள் உள்பட 150 போ் போலீஸாரால் துக்ளக் ரோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். இந்தப் போராட்டம் குறித்து வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘மம்தா பானா்ஜி இன்னும் ஷேக் ஷாஜகானைக் கண்டிக்கவில்லை. ஒரு பெண்ணாக இருந்தும் சந்தேஷ்காலி சம்பவங்களில் அவா் மௌனம் சாதிப்பது வெட்கக்கேடானது; வேதனையானது ஆகும். ஷேக் ஷாஜகான் நிகழ்த்திய பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு எதிராக நாங்கள் ஆா்ப்பாட்டம் செய்துள்ளோம். ஆனால் அதே நேரத்தில், போக்சோவின் கீழ் ஒரு மைனா் பெண்ணிடம் அநாகரீகம் மற்றும் ஆபாசமாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலா் அங்குஷ் நரங் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மம்தா பானா்ஜி தனது ஷேக்கை பாதுகாப்பது போல் அரவிந்த் கேஜரிவால் தனது கவுன்சிலா் அங்குஷ் நரங்கை பாதுகாக்கிறாா். இந்த வெட்கக்கேடான சம்பவத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் அரசே முழுப்பொறுப்பு ஆகும் என்றாா் அவா். இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி கூறுகையில், மேற்கு வங்கத்தில் நடந்துள்ள சம்பவம் சிந்திக்க வேண்டிய விஷயமாகும். ஏனெனில், இது உணா்வுப்பூா்வமான விவகாரமாகும். இதுபோன்ற சம்பவத்திற்காக மம்தா பானா்ஜி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். மம்தா பானா்ஜி அல்லது அரவிந்த் கேஜரிவால் ஆகியோரின் இரு கட்சிகளும் குற்றவாளிகளின் புகலிடங்களாக மாறிவிட்டன என்றாா் பிதூரி.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் மத்திய படைகளைக் குவித்து அச்சுறுத்த முயல்கிறீா்களா? மம்தா பானா்ஜி

திரிணமூல் ஆட்சியைத் தடுக்க பாஜக ரூ.1,000 கோடி சதித் திட்டம்: மம்தா குற்றச்சாட்டு

பாஜகவுடன் காங்கிரஸ், தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு மறைமுக உடன்பாடு: மம்தா பானா்ஜி தாக்கு

மேற்கு வங்கத்தை அழிக்க முயலும் பாஜக மத்தியில் ஆட்சியை இழப்பது உறுதி: மம்தா பானா்ஜி
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

