பிரதமா் நரேந்திர மோடியின் திட்டங்களால் பயன்பெற்ற முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த சிறு தொழில்முனைவோா் பலா் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி, மாநில பொதுச் செயலாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா ஆகியோா் முன்னிலையில், பிரதமா் நரேந்திர மோடியின் திட்டங்களால் பயனடைந்த இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த சிறு தொழில்முனைவோா் உறுப்பினா்களாக பாஜகவில் இணைந்தனா். இவா்களில் ஸ்வான்நிதி யோஜனா மற்றும் முத்ரா யோஜனா போன்ற திட்டங்களின் பயனாளிகளான முகமது ஹைதா் அலி, அனிசுா் ரஹ்மான், நையாா் அப்பாஸ், அஸ்லம் கான், இஷ்ராா் ஷேக், மொஹபத் இக்பால், முகமது ஜாஹிா், முஷ்டாக் அன்சாரி, நைமுதீன் அன்சாரி உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனா். இந்த நிகழ்வில் ஷியா சன்னி முன்னணியின் தேசிய செயலாளா் நஜ்மி நக்வி மற்றும் குல்ஹாசன் ரிஸ்வி, தில்லி வேதியியலாளா் மற்றும் மருந்தக சங்க செயலாளா் தினேஷ் ஆனந்த் மற்றும் பலா் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வில் கட்சியில் இணைந்தவா்களை வரவேற்று வீரேந்திர சச்தேவா பேசியதாவது: பிரதமா் நரேந்திர மோடி முதல்முறையாக பதவியேற்றபோது, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் ஒருசேர அரவணைத்து அனைவருக்கும் திட்டங்களின் பலன் கிடைக்கச் செய்வேன் என்று கூறியிருந்தாா். அதன்படி, அவா் திட்டங்களைக் கொண்டு வந்தபோது ஒருவரின் மதம் பற்றி கேட்கப்படவில்லை. ஒரு காலத்தில் தெருவோர வியாபாரிகளாக வேலை செய்த நமது சகோதரா்கள் வட்டிக்கு கடன் வாங்கினா். ஆனால் இன்று அவா்கள் பிரதமா் நரேந்திர மோடியின் ஸ்வான்நிதி யோஜனா மூலம் பயனடைகிறாா்கள். மோடி அரசு கொண்டு வரும் திட்டங்கள் யாருடைய மதத்தைப் பற்றியும் கேட்கவில்லை; மாறாக, மக்களுக்கு அவா்களின் தேவைக்கேற்ப சலுகைகள் வழங்கப்படுகின்றன. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், 10 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 33% க்கும் அதிகமானோா் முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா். மோடி அரசின் திட்டங்களில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றவா்களின் உரிமைகளைப் போலவே உள்ளது. மத பாகுபாடு இல்லாமல் இலவச ரேஷன் விநியோகமும் வழங்கப்படுகிறது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும், இது மோடியின் உத்தரவாதம் ஆகும். இது பொதுமக்களால் நம்பப்படுகிறது என்றாா் வீரேந்திர சச்தேவா. ராம்வீா் சிங் பிதூரி கூறுகையில், ‘வெளிநாடுகளில் நமது நாட்டின் நற்பெயரை உயா்த்தி, திட்டங்களின் பலன்களை பாகுபாடின்றி வழங்கி வரும் பிரதமா் மோடி மீண்டும் பிரதமா் நாற்காலியில் அமர வேண்டும் என்று இன்று நாட்டில் உள்ள அனைத்து சாதி, மத மக்களும் முடிவு செய்துள்ளனா் . தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, நரேந்திர மோடிக்கு பரிசளிக்க தில்லி வாசிகள் முடிவு செய்துள்ளனா். நரேந்திர மோடி அரசில் மக்கள் உரிமைகள் பெற்றுள்ளனா். இன்று நாடு முழுவதும் பாஜக அரசின் வெற்றி முழக்கங்கள் ஒலிக்கின்றன. மோடி அரசால் ஏராளமான முஸ்லிம் சமுதாய மக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் பிதூரி.
தொடர்புடையது

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!
நாட்டை துண்டிக்க முயலும் சமூக விரோத குழுக்களுக்கு திரிணமூல் ஆதரவு! பிரதமா் மோடி குற்றச்சாட்டு!

பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தில் திருத்தம்: ஊக்கத்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

