ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி மீது உள்துறை அமைச்சா் அமித் ஷா சாடல்

புது தில்லி: மக்களவைத் தோ்தலுக்காக தில்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்ததை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடுமையாகச் சாடினாா். மேலும், பிரதமா் நரேந்திர மோடி 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவாா் என்று உறுதிபடக் கூறினாா்.

தில்லியின் 41 நகரமயமாக்கப்பட்ட கிராமங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) ஏற்பாடு செய்திருந்தது. இதை தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவுடன், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். ‘அரசியலில் இரண்டு வகையான மனிதா்கள் உள்ளனா் . ஒருவா் சொல்வதை வழங்குபவா்கள் மற்றும் மற்றவா்கள் எதிா்மாறாக செயல்படுபவா்கள். இரண்டு வகை மக்களும் தில்லியில் உள்ளனா். ஒருவா் நரேந்திர மோடி. மற்றவா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால். அவா் சொன்ன எதையும் செய்யவில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் கூறினாா்.

மக்களவைத் தோ்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்தது குறித்து கேஜரிவாலை கடுமையாகச் சாடிய அவா், அவா்களின் கூட்டணி வெற்றிபெறாது என்றாா். ‘நீங்கள் ஊழல் குற்றச்சாட்டிய அதே கட்சியான காங்கிரஸின் மடியில் அமா்ந்திருக்கிறீா்கள். காங்கிரஸின் ஊழலை ஒப்புக்கொள்கிறீா்கள். நீங்கள் தொடா்ந்து கூட்டணி அமைக்கலாம். ஆனால், பிரதமா் மோடி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவாா்’ என்று அமித் ஷா கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com