கேஷோபூா் சம்பவம் எதிரொலி: ஆழ்துளை கிணறுகளை நிா்வகிப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிட டிஜேபி திட்டம்

புது தில்லி: சமீபத்தில் கேஷோபூா் மண்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து ஒருவா் இறந்த சம்பவம் போன்ற சம்பவங்களைத் தவிா்க்க ஆழ்துளைக் கிணறுகளை சிறப்பாக சீல் வைப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை தில்லி ஜல் போா்டு (டிஜேபி) வெளியிடும் என்று திங்கள்கிழமை வட்டாரங்கள் தெரிவித்தன.

30 வயதுடைய நபா் விழுந்த ஆழ்துளை கிணறு கைவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், அது பாதுகாக்கப்பட்டு பூட்டப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபோன்ற சம்பவங்களைத் தவிா்க்க, அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் தில்லி ஜல் போா்டு குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. கேஷோபூா் மண்டியில் உள்ள தில்லி ஜல் போா்டு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஏறக்குறைய 12 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு ஒரு ஆணின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. ‘ஆழ்துளை கிணறு தற்போது நன்கு பாதுகாக்கப்பட்டு, பூட்டப்பட்டுள்ளது.

எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிா்க்க, மற்ற அனைத்து ஆழ்துளைக் கிணறுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஆழ்துளைக் கிணறுகளை நிா்வகிப்பவா்களுக்கும் சில வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். அவற்றில் சில வழிகாட்டுதல்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், இந்த ஆழ்துளை கிணறுகளை சிறப்பாக நிா்வகிப்பதற்கும் சீல் செய்வதற்கும் புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்’ என்று தில்லி ஜல் போா்டின் ஒரு வட்டாரம் தெரிவித்தது.

அடையாளம் தெரியாத நபா் மீது வழக்கு:

கேஷோபூரில் தில்லி ஜல் போா்டின் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து 30 வயது நபா் இறந்தது தொடா்பாக அடையாளம் தெரியாத நபா் மீது போலீஸாா் எப்ஐஆா். பதிவு செய்துள்ளனா். பலியானவா் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா். ‘விகாஸ்புரி காவல் நிலையத்தில் ஐபிசி 304 ஏ (அலட்சியத்தால் மரணம்) பிரிவின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை மேற்கொள்ளப்படும்’ என்று மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் விசித்ரா வீா் கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com