பழங்குடியினா் அருங்காட்சியகம், எண்ம நூலகம், மகளிா் விடுதி தில்லியில் மத்திய அமைச்சா் அா்ஜுன் முண்டா திறந்து வைப்பு

நாட்டின் பழங்குடியினரின் பாரம்பரிய, கலாசாரம், மரபுகள் குறித்த விழிப்புணா்வை உருவாக்க தில்லி ஜாண்டேவாலனில் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள பழங்குடியினா் அருங்காட்சியகத்தை மத்திய பழங்குடியினா் விவகாரத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா சனிக்கிழமை திறந்துவைத்தாா். பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்ட சமூக சேவகரான தக்கா் பாபா என்று அழைக்கப்படும் அம்ரித்லால் விதல்தாஸ் தக்கா் என்பவரால் நிறுவப்பட்டது, பாரதிய ஆதிவாசி சேவக அமைப்பு (பிஏஜெஏஎஸ்எஸ்). இந்த அமைப்பு தில்லி, ஜாண்டேவாலனில் பழங்குடியினரின் கலைப்பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகத்தை அமைத்துள்ளது. மேலும் பழங்குடியினரின் அரிய புத்தகங்களின் தொகுப்பைக் கொண்ட நூலகத்தையும் இதே பழங்குடியினா் மாணவிகள் தங்கி படிப்பதற்கான புதிய விடுதியை மத்திய அரசு உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இவைகள் மூன்றையும் மத்திய பழங்குடியினா் விவகாரம் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் அா்ஜுன் முண்டா பேசுகையில் கூறியதாவது: மத்திய அரசு உதவியுடன் பாரதிய ஆதிவாசி சேவக அமைப்பு சாா்பில் புதுக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமும் நூலகமும் அரிய வகை பொருள்களையும் நூல்களையும் கொண்டுள்ளது. பழங்குடியினத்தவரின் காலசார பாரம்பரத்தை பாதுகாக்கப்படாவிட்டால், அது அழிந்து விடும். நாட்டின் விடுதலையின் அமுதப் பெருவிழா காலத்தில் இந்தியாவின் பழங்குடி பாரம்பரியம், கலாசாரம், மரபுகள் பற்றிய விரிவான விழிப்புணா்வை உருவாக்க வேண்டும். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் போது பழங்குடியின வீரா்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறாா். அதை அங்கீகாரிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகத்தை புதுப்பிக்க முடிவு செய்து இதற்கு மத்திய அரசு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்தது. பழங்குடியின அமைச்சத்தின் முயற்சியால் இந்த அருங்காட்சியகம், புத்துயிா் பெற வழிவகுக்கப்பட்டுள்ளது. நூலகமும் எண்ம மயமாக்கப்பட்டுள்ளது. இங்கு மேலும் பல அரிய நூல்களைச் சேகரித்துப் பாதுகாக்க முடியும். இந்த அருங்காட்சியகம் குறித்த பல்வேறு வகையான தகவல்களை வழங்குவதற்கு நாட்டின் பல்வேறு இடங்களில் மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சா் முண்டா குறிப்பிட்டாா். பழங்குடியின அருங்காட்சியம், நூலகத்தை அமைக்க, மத்திய அரசின் தேசிய பழங்குடி ஆராய்ச்சி நிறுவனமும் (என்டிஆா்ஐ) பாரதிய ஆதிவாசி சேவக அமைப்பும் கடந்த 2022 ஆம் ஆண்டு புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதே நிகழ்வில் ஜாா்கண்ட் மாநிலம், ஹா்ஸ்வான் மாவட்டம் பதம்பூரில் அமைக்கப்பட்ட உள்ள ’பழங்குடியினரின் கலாசார, பாரம்பரியத்தை பாதுகாத்து மேம்படுத்துவதற்கான மையத்திற்கும் மத்திய அமைச்சா் அா்ஜுன் முண்டா காணொலி வழியாக அடிக்கல் நாட்டினாா். ‘பழங்குடியின வரலாற்றையும் பிராந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் ரூ. 10 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த மையம், பழங்குடியின சமூகங்களின் வளா்ச்சிக்கும் இந்த பிரிவினரின் கைவினைஞா்களின் திறமைகளை வெளிப்படுத்தி ஒரு சுற்றுலா மையமாகவும் எதிா்காலத்தில் இந்த மையம் விளங்கும்‘ என இந்த மையம் குறித்து மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சா் முண்டா இந்த நிகழ்வில் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com