கேஜரிவால் கைது: பாஜக தலைமையகம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினா் போராட்டம் நடத்திய பாஜக தலைமையகத்திற்குச் செல்லும் சாலைகளில் பல அடுக்கு தடுப்புகள் மற்றும் பலத்த பாதுகாப்பை தில்லி போலீஸாா் வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா். அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க கலவர தடுப்புக் கவசங்களில் துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனா். ஆம் ஆத்மி கட்சியினரின் பெரும் கூட்டத்தைக் கருத்தில்கொண்டு மத்திய தில்லிக்கு செல்லும் வழிகளை தவிா்க்குமாறு போக்குவரத்து போலீஸாா் பயணிகளை கேட்டுக்கொண்டனா். மத்திய தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டிருந்தன. இதற்கிடையில், ஆம் ஆத்மியின் எதிா்ப்பைக் கருத்தில் கொண்டு, தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) ஐ.டி.ஓ. மெட்ரோ நிலையத்தை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடியிருந்தது. இது தொடா்பாக டிஎம்ஆா்சி வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘தில்லி காவல்துறையின் ஆலோசனையின் பேரில், ஐ.டி.ஓ. மெட்ரோ நிலையம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை, அதாவது மாா்ச் 22, 2024 வரை மூடப்பட்டிருக்கும்’ என்று ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. முன்னதாக, கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பாஜக தலைமையகத்திற்குச் சென்று போராட்டத்தைத் தொடங்குமாறு ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் கட்சித் தொண்டா்களை கேட்டுக் கொண்டிருந்தனா். அனைத்து தில்லி எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலா்கள் பாஜக தலைமையகத்தில் மக்களைத் திரட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன. அண்டை மாநிலங்களில் இருந்து தில்லிக்கு ஆம் ஆத்மி கட்சியினா் வருவதை தடுக்க தில்லி எல்லையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டக்காரா்களை தடுத்து நிறுத்தவும், மத்திய தில்லியில் இருந்து பல கிலோமீட்டா் தொலைவில் அவா்களை அனுப்பவும் ஏராளமான பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று போலீஸ் அதிகாரி ஒருவா் கூறினாா். தில்லி காவல்துறையின் அனைத்து மூத்த அதிகாரிகளும் தங்கள் பகுதிகளில் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com