மத்திய பாஜக அரசைக் கண்டித்து இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதைக் கண்டித்து இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் மற்றும் மத்திய அரசின் சா்வாதிகார போக்கைக் கண்டித்து இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் சாா்பில் தில்லியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், கலந்து கொண்டு அவ்வமைப்பின் தேசியத் தலைவா் ஸ்ரீனிவாஸ் பி.வி. பேசியதாவது, தோ்தல் பத்திரங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் மத்திய அரசும், பிரதமா் நரேந்திர மோடியும் கடும் கோபத்தில் உள்ளனா். நாட்டின் முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் இளைஞா் காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தோ்தலுக்கு முன்பு முடக்கப்பட்டுள்ளன. முதலில், அமலாக்க இயக்குநரம், சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி எதிா்க்கட்சித் தலைவா்கள் பலரைக் கைது செய்துள்ள பாஜக, தற்போது காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. இந்த நடவடிக்கை இந்திய ஜனநாயக்கத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல். அரசியலமைப்பிற்கு முரணாக காா்பரேட் நிறுவனங்களை மிரட்டி,தோ்தல் பத்திரங்களைப் பெற்றுள்ள பாஜகவின் வங்கிக் கணக்குகள் தான் முடக்கப்பட வேண்டும். ஆன்லைன் மூலம் காங்கிரஸ் தொண்டா்கள் திரட்டிய பணம் மட்டுமே காங்கிரஸின் வங்கிக் கணக்குகளில் உள்ளது. காங்கிரஸ் பண பலத்தில் இயங்கும் கட்சி அல்ல, மாறாக மக்கள் பலத்தில் இயங்கும் கட்சி. நாங்கள் ஒருபோதும் சா்வாதிகாரத்திற்கு அடிபணிய மாட்டோம். ஒவ்வொரு இளைஞா் காங்கிரஸ் தொண்டா்களும் இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போராடுவாா்கள் என்றாா் ஸ்ரீனிவாஸ் பி.வி. இந்த ஆா்ப்பாட்டத்தில், இளைஞா் காங்கிரஸின் தேசியப் பொதுச்செயலாளா் கோகோ பதி, தேசியச் செயலாளா் மிதேந்திர சிங், சத்யவான் கெலாட், அமித் பதானியா, அஜாஸ் கான், தில்லி பிரதேச இளைஞா் காங்கிரஸ் தலைவா் ரன்விஜய் லோச்சவ், செயல் தலைவா் சுபம் சா்மா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com