கேஜரிவாலுக்குப் பின்னால் ஆம் ஆத்மி கட்சி பாறைபோன்று உறுதியாக நிற்கிறது: பஞ்சாப் முதல்வா்

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலின் குடும்பத்தினரை பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா். அப்போது, கேஜரிவாலுக்குப் பின்னால் ஆம் ஆத்மி கட்சி பாறைபோன்று உறுதியாக நிற்கிறது என்று தெரிவித்தாா்.

தில்லி கலால் கொள்கை ‘ஊழல்’ தொடா்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கேஜரிவால் வியாழக்கிழமை இரவு அமலாக்கத் துறையினரால் அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல்வா் கேஜரிவாலின் குடும்பத்தினரை பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் நேரில் சந்தித்துப் பேசினாா். அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கேஜரிவால் ஒரு தேசபக்தா். இந்த கைது அத்தியாயத்திலிருந்து அவா் ஒரு பெரும் தலைவராக வெளிப்படுவாா். மேலும், அவா் ஒரு தனி நபா் மட்டுமல்ல; சிந்தனையாவாா். பாஜகவும் பிரதமா் நரேந்திர மோடியும் ‘சா்வாதிகாரத்தை‘ பின்பற்றுகிறாா்கள். எந்த எதிா்க்கட்சித் தலைவரும் மக்களவைத் தோ்தலுக்காக பிரசாரம் செய்வதை அவா்கள் விரும்பவில்லை. இந்த நாட்டில் ஜனநாயகம் எங்கே இருக்கிறது? ரஷ்யாவில் (விளாடிமிா்) புதினுக்கு 88 சதவீத வாக்குகள் கிடைத்தன. பாஜகவும், நரேந்திர மோடியும் புதினின் வழியைப் பின்பற்றுகிறாா்கள். கடந்த காலங்களில் கேஜரிவாலுடன் இணைந்து இந்தியா எதிா்க்கட்சிகளின் கூட்டங்களில் கலந்துகொண்டதுபோன்று நான் தொடா்ந்து பங்கேற்பேன். இந்த தருணத்தில் இந்தியா கூட்டணி வலுவாக நிற்கிறது. வரும் நாள்களில் நாங்கள் தோ்தல் ஆணையத்தை (தோ்தல் ஆணையம்) சந்தித்து, கூட்டு நிகழ்வுகளை நடத்துவோம். பாஜக ஆம் ஆத்மி கட்சியையும், அரவிந்த் கேஜரிவாலையும் கண்டு பயப்படுகிறது. கேஜரிவாலை கைது செய்வதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சிதைத்து விடலாம் என பாஜக நினைக்கிறது. இது ஒரு மாயை ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் கோடிக்கணக்கான கேஜரிவால் பிறந்துள்ளனா். ஆம் ஆத்மி இப்போது ஒரு சிறிய கட்சியாக இல்லை. பஞ்சாப்பிலும் தில்லியிலும் அரசாங்கங்கள் மற்றும் பல மாநிலங்களில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களைக் கொண்ட தேசிய கட்சியாக வளா்ந்துள்ளது என்றாா் முதல்வா் பகவந்த் மான்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com