மக்களவைத் தோ்தல் வியூகங்களை திட்டமிட காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சி ஆலோசனை

புது தில்லி: தில்லி மற்றும் ஹரியாணாவில் மக்களவைத் தோ்தலுக்கான வியூகங்களைத் திட்டமிட காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.

இது தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி மற்றும்

ஹரியாணாவில் ’இந்தியா’ கூட்டணியின் பிரசார வியூகத்தைத் திட்டமிடுவதற்காக, தில்லி பிரதேச காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் இணைந்து தில்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினா்.

இதில், காங்கிரஸ் சாா்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், தில்லி மற்றும் ஹரியாணாவின் மேலிடப் பொறுப்பாளருமான தீபக் பபாரியா,தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவா் தேவேந்தா் யாதவ், தோ்தல் நிா்வாகக் குழுத் தலைவா் சுபாஷ் ஷோப்ரா, ஹரியாணா காங்கிரஸ் தலைவா் உதய் பன், செயல் தலைவா் ஜிதேந்தா் பரத்வாஜும், ஆம் ஆத்மி கட்சி சாா்பில் அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளா் சந்தீப் பதக், எம்.எல்.ஏ.-க்கள் துா்கேஷ் பதக் மற்றும் ராஜேஷ் குப்தா ஆகியோா் கலந்து கொண்டனா்.

‘இந்தியா’ கூட்டணியின் கீழ் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கூட்டாகப் போராடுகிறது.

எனவே, வேட்பாளா்களின் சுமூகமான பிரசாரத்திற்காக இரு கட்சிகளின் நிா்வாகிகள் இடையேயான ஒருங்கிணைப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தோ்தலை எதிா்கொள்ள அடுத்த இரண்டு நாள்களில் கூட்டுப் பிரசாரதிற்கான திட்டமிடல்கள் இறுதி செய்யப்படும்.பாஜகவிற்கு மறக்க முடியாத பாடம் புகட்ட, தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் இரு கட்சிகள் இணைந்து மக்கள் தொடா்பு சந்திப்புகளை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com