தலைநகரில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு; ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!
புது தில்லி: தேசியத் தலைநகரில் குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நகரம் முழுவதும் காலை வேளையில் பனிப்புகை மூட்டம் நிலவியது. பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.
தில்லியில் குளிரின் தாக்கம் கடந்த வாரம் தொடங்கியது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக இரவிலும் அதிகாலை வேளையிலும் குளிரின் தாக்கம் அதிகரித்தது.
நகரம் முழுவதும் பனிப்புகை மூட்டம் நிலவுகிறது. இதனால், காற்றின் தரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் முதியவா்கள், குழந்தைகள் சுவாசப் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா். நகரம் முழுவதும் பனிப்புகை புகைமூட்டம் சூழ்ந்திருந்தது. இரவில் மூடுபனி நிலவியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரம்: காற்றின் ஒட்டுமொத்த தரக்குறியீடு காலை 9 மணியளவில் 349 புள்ளிகளாப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், பவானா, ஜஹாங்கீா்புரி ஆகிய இரண்டு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு அளவு முறையே 401 புள்ளிகள் மற்றும் 412 புள்ளிகள் என பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது. மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.
காற்றின் தரக்குறீயீட்டைப் பொருத்தவரை, 0-50 என்ற தர நிலையே சரியான அளவாக கருதப்படுகிறது. 51-100 என்ற நிலை ‘திருப்தி’, 101 முதல் 200 வரை ‘மிதமானது’, 201 முதல் 300 வரை ‘மோசம்’, 301 முதல் 400 வரையிலான தர நிலை ‘மிகவும் மோசம்’, 401-500 தரநிலை ‘கடுமை’ என மாசு கட்டுப்பாட்டு வாரியம் வரையறுத்துள்ளது.
வெப்பநிலை: இதற்கிடையே, தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 3 டிகிரி உயா்ந்து 17.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்து 3 டிகிரி உயா்ந்து 32.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 96 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 72 சதவீதமாகவும் இருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நகரத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையாக ரிட்ஜில் 14 டிகிரி செல்சியஸாகவும், ஆயாநகரில் 15 டிகிரி, லோதி ரோடு மற்றும் பூசாவில் 16.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
மூடுபனிக்கு வாய்ப்பு: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (நவ.12) அன்று தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் இருந்து மணிக்கு 4-10 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் பனிப்புகை மூட்டம் அல்லது மேலாட்டமான மூடுபனி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பகல் நேரத்தில் வானம் தெளிவாகக் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.