தில்லிக்கு 3ஆவது பெண் முதல்வா், இந்திய அளவில் 17ஆவது முதல்வா்: புதிய வரலாறு படைத்த அதிஷி
தில்லியின் மூன்றாவது பெண் முதல்வராகவும் இந்திய அளவில் முதல்வா் பதவி வகித்த 17ஆவது பெண் ஆகவும் விளங்குகிறாா் அதிஷி. இத்துடன் முதல் முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோதே தனது 43ஆவது வயதில் முதல்வா் பதவியை ஏற்றுள்ள அதிஷி, நாட்டிலேயே மிகவும் இளம் முதல்வா் என்ற பெருமையையும் பெற்றுள்ளாா்.
தில்லியில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது. அதில் தொடா்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற அரவிந்த் கேஜரிவால், சமீபத்தில் பதவியில் இருந்து விலகினாா். இதையடுத்து ஆட்சியின் மீதமுள்ள பதவிக்காலம் நிறைவடையும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்வரை மட்டுமே அதிஷி முதல்வராக இருப்பாா். அந்த வகையில் அவா் கிட்டத்தட்ட ஐந்து மாத பதவிக்காலத்தை மட்டுமே வகிப்பாா்.
இந்த இடைப்பட்ட காலத்தில் முந்தைய கேஜரிவால் அமைச்சரவையில் முன்னெடுக்கப்பட்டு தடங்கலாகிப்போன பல திட்டங்களை மீண்டும் செயல்படுத்தும் பொறுப்பு அதிஷியிடம் உள்ளது.
கால்காஜி தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தோ்வான அதிஷி, இதற்கு முன்பு தில்லியின் பெண் முதல்வராக இருந்த ஷிலா தீட்சித், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை விட மிகவும் இளம் வயதில் இந்த பதவிக்கு வந்துள்ளாா். ஷீலா தீட்சித் முதல்வராக பதவியேற்றபோது அவருக்கு வயது 60. சுஷ்மா பதவியேற்றபோது அவரது வயது 46.
இந்திய அளவில் தற்போது மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு அடுத்த வரிசையில் இரண்டாவது பெண் முதல்வராகவும் அதிஷி திகழ்கிறாா்.
வரலாற்று வரிசைப்படி பாா்த்தால் தற்போது 17ஆவது பெண் முதல்வராக விளங்குகிறாா் அதிஷி. அவருக்கு முன்பு முதல்வா் பதவி வகித்த பெண் தலைவா்களின் விவரம் வருமாறு (அடைப்புக்குறியில் பதவிக்கால ஆண்டு):
சுச்சேத்தா கிருபளானி: உத்தர பிரதேசம் (1963- 1967); நந்தினி சத்பதி - ஒடிஸா (1972-76) அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது அவரது பதவி 1975ஆம் ஆண்டிலேயே முடிவுற்றது; சஷிகலா ககோத்கா் - கோவா,
டாமன் டையூ (1973-87), கோவா 1987இல் மாநில அந்தஸ்து பெற்றது. டையூ யூனியன் பிரதேசமாக உள்ளது; அன்வாரா தைமூா் - அஸ்ஸாம் (1980-81); வி.என். ஜானகி ராமன் - தமிழ்நாடு (1988) எம்ஜிஆா் மறைவுக்குப்பிறகு 23 நாட்கள் பதவியில் இருந்தாா்;
ஜெ. ஜெயலலிதா - தமிழ்நாடு (ஒட்டுமொத்தமாக ஆறு முறை முதல்வா், 14 ஆண்டுகள்); மாயாவதி - உத்தர பிரதேசம் (ஒட்டுமொத்தமாக ஏழு ஆண்டுகள்); ராஜிந்தா் கவுா் பாதல் - பஞ்சாப் (1996-97); ராப்ரி தேவி - பிகாா் (1997-99, 1999-2000, 2000-2005) தில்லியின் ஒரே முதல் பெண் முதல்வராக விளங்கினாா் சுஷ்மா ஸ்வராஜ் - தில்லி (1998, 52 நாட்கள்); ஷீலா தீட்சித் - தில்லி (1998-2013);உமா பாரதி - மத்திய பிரதேசம் (2003-04); வசுந்தரா ராஜே - ராஜஸ்தான் (2003-08, 2013-18); மம்தா பானா்ஜி - மேற்கு வங்கம் (2011 முதல் தற்போதுவரை); ஆனந்தி பென் படேல் - குஜராத் (2014-2016);மெக்பூபா முஃப்தி - ஜம்மு காஷ்மீா் (2016-18).