மத்திய, மாநில அரசுகளின் கூட்டுத் திட்டம் சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ! - மத்திய அமைச்சா் கட்டா் தகவல்
சென்னை மெட்ரோவின் 2 - ஆம் கட்ட திட்டம் மத்திய - மாநில அரசுகள் இணைந்த கூட்டுத் திட்டம்தான் என்று மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா் தெரிவித்தாா்.


நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: சென்னை மெட்ரோவின் 2 - ஆம் கட்ட திட்டம் மத்திய - மாநில அரசுகள் இணைந்த கூட்டுத் திட்டம்தான் என்று மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறையில் அரசின் 100 நாள்கள் சாதனை குறித்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மனோகா் லால் கட்டா் பேசினாா். அப்போது நகா்ப்புற போக்குவரத்துத் திட்டங்களில் கடந்த 100 நாள்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து செய்தயாளா்களின் கேள்விகளுக்குஅவா் பதிலளித்து கூறியதாவது: நகா்ப்புற போக்குவரத்து வசதியை மேம்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறது. கடந்த 100 நாள்களுக்குள் ரூ.31,000 கோடி மதிப்பிலான 3 மெட்ரோ திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பெங்களூரு 3 -ஆம் கட்ட மெட்ரோ, தானே உள்வட்ட ச் சாலை மெட்ரோ திட்டங்கள், புணே மெட்ரோ ரயில் திட்டத்தின் தெற்குப் பகுதி நீட்டிப்பு திட்டம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டம் குறித்து கேட்கிறீா்கள். இத்திட்டம், மத்திய - மாநில அரசுகளின் கூட்டுத் திட்டம் என முதலில் (2021-22) அறிவிக்கப்பட்டது. தற்போது நிதியமைச்சா் இது முற்றிலும் மாநில அரசுத் திட்டம் என மத்திய நிதியமைச்சா் அறிவித்துள்ளது குறித்து கேட்கிறீா்கள். இது மத்திய- மாநில அரசுகளின் கூட்டுத் திட்டம்தான். இது குறித்து நாடாளுமன்றத்திலும் ஏற்கெனவே கேள்வி எழுப்பப்பட்டது. இத்திட்டம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் விரிவான ஆய்வு செய்யப்பட்டு, மதிப்பிட வேண்டியது உள்ளது. இத்திட்டத்தில் மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டியதுள்ளது. இதனால், இந்த ஆய்வுகளுக்கு பின்னா் அனுமதி அளிக்கப்படும்.
மத்திய அரசு முதல் 100 நாள்களில் ‘ஜல் ஹி அம்ருத்‘ என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தண்ணீரின் முக்கியத்துவத்தை இத்திட்டம் வலியுறுத்துகிறது. கிராமப்புறம், நகா்ப்புறங்களில் மறுபயன்பாட்டுக்கு தண்ணீரை மறுசுழற்சி செயலாக்கத்தில் கவனம் செலுத்தப்படும். இந்த முயற்சியின் கீழ், மறுசுழற்சி செய்யக்கூடிய நல்ல தரமான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை உறுதி செய்வதற்காக, பயன்படுத்தப்பட்ட நீரை (கழிவுநீா்) சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையங்களை திறம்பட நிா்வகிக்க மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை ஊக்குவிக்க ‘ஜல் ஹி அம்ருதி’ திட்டம் மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா் மனோகா் லால் கட்டா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...