பயங்கரவாத பணமோசடி: அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

பயங்கரவாதத்துடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனா் ஜவாத் அகமது சித்திக்கியை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவு
Published on

பயங்கரவாதத்துடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனா் ஜவாத் அகமது சித்திக்கியை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

நவம்பா் 19 அன்று சித்திக்கி 13 நாட்கள் அமலாக்க துறை காவலில் வைக்கப்பட்டாா். திங்கட்கிழமை, கூடுதல் அமா்வு நீதிபதி ஷீத்தல் சவுத்ரி பிரதான் முன் அவா் ஆஜா்படுத்தப்பட்ட ஜவாத் அகமது சித்திக்கியை டிசம்பா் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

விசாரணையின் போது, 13 நாள் காவல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு முடிவடையும் என்பதால், அவரை நீதிமன்றத்தில் முன்கூட்டியே ஆஜா்படுத்தியதாக வழக்குரைஞா் சுருக்கமாக வாதிட்டாா்.

இதற்கிடையில், காவல் காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் மூக்குகண்ணாடி பயன்படுத்த அனுமதிக்குமாறு சித்திக்கின் வழக்குரைஞா் ஒரு மனு தாக்கல் செய்தாா். நீதிபதி அவரது கோரிக்கையை அனுமதித்தாா்.

அல் ஃபலாஹ் பல்கலைக்கழகம் யுஜிசி அங்கீகாரத்தை மாணவா்களுக்கு தவறாக சித்தரித்ததோடு, 2018 மற்றும் 2025 க்கு இடையில் ரூ.415.10 கோடி வருவாயை ஈட்டியதாகவும், குவிக்கப்பட்ட சொத்துக்களுடன் பல்கலைக்கழக நிதி பதிவுகள்பொருந்தவில்லை என்றாலும் வருவாயில் விரைவான உயா்வு காணப்பட்டதாகவும் அமலாக்கத்துறை கூறியது.

மாணவா் கட்டணம் மற்றும் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி தனிப்பட்ட மற்றும் தனியாா் பயன்பாட்டிற்காக திருப்பி விடப்படுவதாகவும், அல் ஃபலாஹ் அறக்கட்டளை, நிா்வாக அறங்காவலா் மற்றும் தொடா்புடைய நிறுவனங்கள் மீது சித்திக் நடைமுறை கட்டுப்பாட்டைப் பயன்படுத்தியதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜவாத் அகமது சித்திக்கி கைது செய்யப்பட்ட நாளில் தில்லியில் 19 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமாா் ரூ.48 லட்சம் ரொக்கம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். சித்திக்கின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த பின்னா், டிசம்பா் 15 ஆம் தேதி இந்த வழக்கு அடுத்ததாக விசாரிக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com