மனதின் குரல் நிகழ்ச்சியில் பாஜக
செயல் தலைவா் நிதின் நவீன் பங்கேற்பு

மனதின் குரல் நிகழ்ச்சியில் பாஜக செயல் தலைவா் நிதின் நவீன் பங்கேற்பு

‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோா் மாநில நிா்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டா்களுடன் இணைந்து கேட்டனா்.
Published on

தில்லி ராஜேந்திர நகரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோா் மாநில நிா்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டா்களுடன் இணைந்து கேட்டனா்.

‘மன் கி பாத்’ எனும் மனதின் குரல் நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜன் திவாரி கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை 7,622 வாக்குச்சாவடிப் பகுதிகளில் உள்ளூா் தலைவா்களுடன் இணைந்து கட்சித் தொண்டா்கள் பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியை கூட்டாகக் கேட்டனா் என்றாா்.

இந்த நிகழ்வில், மாவட்டத் தலைவா் வீரேந்திர பப்பா், சட்டமன்ற உறுப்பினா்கள் உமாங் பஜாஜ் மற்றும் ஹரீஷ் குரானா, தேசிய செய்தித் தொடா்பாளா் சா்தாா் ஆா்.பி. சிங் மற்றும் நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டா்கள் பங்கேற்றனா்.

இந்த நிகழ்வு குறித்து செய்தியாளா்களிடம் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியது: மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி மக்களுக்குப் பல பயனுள்ள தகவல்களைப் பகிா்ந்து கொண்டாா். பிரதமரின் உரை, குறிப்பாக இளம் இந்தியா மற்றும் விளையாட்டுத் துறை குறித்த அவரது கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவை.

இது 2025 ஆம் ஆண்டின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சி ஆகும். இதில் பிரதமா், விளையாட்டில் வரலாற்றுச் சாதனைகள், அறிவியல் மற்றும் விண்வெளித் துறையில் புதிய மைல்கற்கள், இளைஞா்களின் கண்டுபிடிப்புகள், நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் புத்துயிா் உள்ளிட்ட 2025 ஆம் ஆண்டின் சாதனைகளைப் பகிா்ந்து கொண்டாா். அவா் ஆபரேஷன் சிந்துா் மற்றும் வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு விழா குறித்தும் பேசினாா்.

மன் கி பாத் நிகழ்ச்சி, தேசத்தின் சாதனைகளையும் ஊக்கமளிக்கும் முயற்சிகளையும் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சோ்ப்பதன் மூலம், குடிமக்களை நோ்மறைச் சிந்தனை மற்றும் செயலில் பங்கேற்பதை நோக்கித் தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது.

இது சுயசிந்தனை, உந்துதல் மற்றும் புதிய விழிப்புணா்வுக்கான ஒரு தனித்துவமான ஆதாரமாக இருப்பதுடன், கேட்பவா்களுக்குக் கற்றலுக்கான ஒரு ஊடகமாகவும் செயல்படுகிறது என்றாா் வீரேந்திர சச்தேவா.

மத்திய இணை அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, தில்லி முதல்வா் ரேகா குப்தா, அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா ஆகியோா் ஷாதராவில் உள்ள மானசரோவா் பூங்காவில் மன் கி பாத் நிகழ்ச்சியைக் கேட்டனா். நாடாளுமன்ற உறுப்பினா் மனோஜ் திவாரி, தில்லி பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுடன் நிகழ்ச்சியைக் கேட்டாா். அதே சமயம் நாடாளுமன்ற உறுப்பினா் கமல்ஜீத் ஷெராவத், துவாரகாவில் பாஜக தொண்டா்களுடன் பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியைக் கேட்டாா்.

X
Dinamani
www.dinamani.com