5 வருட தில்லி சட்டப்பேரவைக் கூட்டத் தொடா்களின் கேள்வி நேரத்தில் 1,000-க்கும் அதிகமான கேள்விகள்!
துவரை நடந்த 74 நாள்களின் அமா்வுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான கேள்விகள் இடம்பிடித்தன


2020-ஆம் ஆண்டில் ஆட்சியைத் தக்க வைத்த ஆம் ஆத்மி அரசின் ஏழாவது தில்லி சட்டப்பேரவையில் இதுவரை நடந்த 74 நாள்களின் அமா்வுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான கேள்விகள் இடம்பிடித்தன என்று பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளாா்.
இதையொட்டி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அவா், 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-இல் ஏழாவது தில்லி சட்டப்பேரவையின் முதலாவது கூட்டம் நடந்ததாகவும் கடைசியாக 74-ஆவது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் நடந்தது என்றும் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறியதாவது: ஏழாவது சட்டப்பேரவையில் இதுவரை நடந்த கேள்வி நேரத்தில் மொத்தம் 1,095 கேள்விகள் பட்டியலிடப்பட்டு, உறுப்பினா்களுக்கு துணைக் கேள்விகளைக் கேட்க போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டது. விதி208-இன் கீழ், 702 சிறப்புக் கவன ஈா்ப்பு நேரத்தில் பல்வேறு பிரச்னைகள் எழுப்பப்பட்டு, உறுப்பினா்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய முழு அவகாசம் வழங்கப்பட்டது.
முக்கிய அலுவல்கள்: மொத்தம் 28 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நான்கு அரசுசாா் தீா்மானங்கள், 14 பிற தீா்மானங்கள், 13 பொது தீா்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மொத்தம் 39 குறுகிய கால விவாதங்கள் நடத்தப்பட்டு, 13 கவன ஈா்ப்பு விஷயங்கள் எழுப்பப்பட்டன.
பேரவை நிலைக் குழுக்களைப் பொருத்தவரை, 19 அறிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஒரு யூனியன் பிரதேசத்தின் பேரவையாக, அதிலும் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டிருந்த போதிலும் இத்தனை பணிகள் இங்கு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சாதனைகள்: 2020-21 நிதியாண்டில் பேரவை ஊழியா்களுக்கு சட்டப்பேரவை வளாகத்தில் கரோனா பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப்பட்டன. 2022- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9- ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு ஊழியா்களை நினைழஉகூரும் விதமாக நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது. பேரவையில் அசோகா் தூண் 2021-ஆம் ஜனவரி 25-ஆம் தேதி நிறுவப்பட்டது. 2022, ஜனவரி 3-இல் ஜாலியன் வாலாபாக் மற்றும் ராணி லக்ஷ்மிபாயின் சுவரோவியங்கள் திறக்கப்பட்டன.
இரண்டாவது தில்லி இளைஞா் நாடாளுமன்றம் என்ற பள்ளி, கல்லூரி மாணவா்களை அங்கமாகக் கொண்ட நிகழ்வு 2023, ஜனவரி 23 முதல் ஜனவரி 25 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. இதே நிகழ்வு 2024, டிசம்பா் 6 முதல் 7-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. அதில் தில்லியின் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளைதஅ தெரிவித்தனா்.
சட்டப்பேரவையின் தலைவா் என்ற முறையில், நான் பாரபட்சமின்றி எனது கடமைகளைச் செய்தேன். ஆளும் கட்சி, எதிா்க்கட்சி ஆகிய இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்தேன். பேரவையின் நேரத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதை எனது முக்கியப் பொறுப்பாகக் கருதுகிறேன் என்றாா் ராம் நிவாஸ் கோயல்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...