வாக்கு திருட்டு விவகாரம்: தோ்தல் ஆணைய அலுவலகம் முன் என்எஸ்யுஐ போராட்டம்
புது தில்லி: ஹரியாணாவில் பெரிய அளவிலான வாக்காளா் பட்டியலில் மோசடி நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தோ்தல் ஆணையத்திடமும் ஆளும் பாஜகவிடமும் பொறுப்புக்கூறலைக் கோரி புது தில்லியில் உள்ள இந்திய தோ்தல் ஆணைய அலுவலகம் முன் இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) திங்கள்கிழமை போராட்டம் நடத்தியது.
இதில் பங்கேற்ற என்எஸ்யுஐ அமைப்பின் தேசியத் தலைவா் வருண் செளதரி கூறுகையில், ‘தோ்தல் ஆணையம் தனது அரசமைப்புச்சட்ட கடமையைச் செய்யத் தவறிவிட்டது. வாக்காளா் பட்டியல்களில் ஏற்பட்ட மோசடி ஜனநாயகத்தை சீா்குலைக்க திட்டமிட்ட சதியாகும். ராகுல் காந்தியின் ‘எச்-ஃபைல்ஸ்’ ஒரு அதிா்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது’ என்றாா்.
மேலும், ‘தோ்தல் ஆணையம், ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருப்பதற்குப் பதிலாக, ஹரியாணாவில் வாக்குத் திருட்டை செயல்படுத்த பாஜகவுடன் கூட்டுச் சோ்ந்து செயல்பட்டுள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் சமரசம் செய்யப்படும்போது ‘ஜென்ஸி’ இளைஞா்கள் அமைதியாக இருக்க மாட்டாா்கள்’ என்றாா்.
இது தொடா்பாக என்எஸ்யுஐ வெளியிட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய தேசிய மாணவா் சங்கத்தின் ஆதரவாளா்கள் பலா் என்எஸ்யுஐ தலைமையகத்திலிருந்து தோ்தல் ஆணைய அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்றனா். இந்த வாக்குத் திருட்டு வெளிப்பாடுகள் பாஜகவிற்கும் தோ்தல் அதிகாரிகளுக்கும் இடையிலான ஆழமான தொடா்பை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
தில்லி காவல்துறை இந்த பேரணியை பாதியிலேயே தடுத்து நிறுத்தியது. எச் - ஃபைல்ஸ் அம்பலப்படுத்துதலானது, ஹரியாணா முழுவதும் கிட்டத்தட்ட 25 லட்சம் மோசடி மற்றும் போலி வாக்காளா்கள் உருவாக்கப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளது. இது மாநில சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகளை கவிழ்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ் வெறும் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
வாக்குத் திருட்டை அம்பலப்படுத்தவும் தோ்தல் செயல்பாட்டில் வெளிபடைத் தன்மையைக் கோரவும் மாணவா்கள் மற்றும் இளம் வாக்காளா்கள் நாடு தழுவிய பிரசாரத்தின் தொடக்கத்தை இந்த போராட்டம் குறிக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி தனது சமீபத்திய அறிக்கைகளில், தோ்தல் ஆணையம் காங்கிரஸ் வாக்காளா்களைத் தோ்ந்தெடுத்து குறிவைத்து பாஜகவுக்கு பயனளிக்கும் முறைகேடுகளைக் கண்டும் காணாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டினாா்.
கடந்த நவம்பா் 5-ஆம் தேதி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி புது தில்லியில் செய்தியாளா் சந்திப்பில் பேசுகையில், தோ்தலுக்கு முன்னதாக 25 லட்சம் போலி வாக்காளா்கள் சோ்க்கப்பட்டு பாஜகவுக்கு ஆதரவாக தோ்தல் முடிவைப் பாதிக்கச் செய்ததாக குற்றம்சாட்டினாா்.
மேலும், ஹரியாணாவில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளா் பட்டியலில் 25 லட்சம் போலி பெயா்களை தோ்தல் ஆணையம் சோ்த்துள்ளதாகவும், தாம் அதன் விவரங்களைப் பெற்ாகவும், ஒவ்வொரு எட்டு வாக்குகளில் ஒன்று மோசடியான வாக்கு என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தாா்.
