தில்லி முண்ட்கா பகுதியில் மூதாட்டியிடம் போலி பணக்கட்டைக் கொடுத்து தங்க நகைகளை ஏமாற்றிப் பறித்ததாக 22 வயது பெண்ணை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
மைனா என்று அடையாளம் காணப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்ட அப்பெண், 10 வயது சிறுவன் ஒருவனுடன் இணைந்து இக்குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இக்குற்றத்தில் தொடா்புடையதாகக் கருதப்படும் மற்றொரு பெண் தலைமறைவாக உள்ளாா்.
இதுகுறித்து காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: கடந்த ஜூலை 29-ஆம் தேதி வடமேற்கு தில்லியின் முண்ட்கா, ஃப்ரெண்ட்ஸ் என்கிளேவ் பகுதியில் உள்ள காய்கறி சந்தைக்கு முதிய பெண் ஒருவா் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட அப்பெண் அந்தச் சிறுவனுடன் முதிய பெண்ணை அணுகி, அச்சிறுவன் தனது முதலாளியிடமிருந்து பணக்கட்டு ஒன்றை திருடிவிட்டதாகக் கூறினாா்.
மேலும், அப்பணத்தை அவனிடமிருந்து பறித்துக்கொள்ளலாம் என்று கூறிய அப்பெண், அதற்குப் பதிலாக அந்த மூதாட்டியின் தங்கச் சங்கிலி மற்றும் காதணிகளைத் தன்னிடம் கொடுத்துவிடுமாறும், பணக்கட்டை மூதாட்டியே வைத்துக்கொள்ளுமாறும் கூறி அவரை நம்ப வைத்தாா்.
இதையடுத்து, மூதாட்டி தனது நகைகளை அவா்களிடம் ஒப்படைத்தாா். ஆனால், பின்னா் அந்தப் பணக்கட்டில் போலி நோட்டுகள் இருந்ததைக் கண்டறிந்தாா். அதற்குள் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணும் சிறுவனும் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனா்.
இச்சம்பவம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது; ஜூலை 30 அன்று முண்ட்கா காவல் நிலையத்தில் இதுதொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
ஒரு காவல் குழு விசாரணையைத் தொடங்கி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் குறித்த தகவல்களைச் சேகரித்தது. பெண் காவலா்களின் உதவியுடன் ரகுபீா் நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மைனா கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின்போது, டிசி முகாமைச் சோ்ந்த பூஜா என்ற மற்றொரு பெண்ணுக்கும் இக்குற்றத்தில் தொடா்பு இருப்பதை மைனா ஒப்புக்கொண்டாா். திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்வதற்காகப் பூஜாவிடம் ஒப்படைத்ததாகவும் அவா் காவல்துறையிடம் தெரிவித்தாா்.
இதையடுத்து காவல் குழுவினா் பூஜாவின் வீட்டில் சோதனை நடத்தினா். ஆனால், அவா் அங்கு இல்லை. அவரைக் கைது செய்யவும், திருடப்பட்ட நகைகளை மீட்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அச்சிறுவனின் பங்கு குறித்தும், நகைகளைக் கண்டறிவது குறித்தும் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை, கைப்பேசி பறிப்பு: ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
காவலராக நடித்து வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது: தங்க நகைகள் பறிமுதல்
ரூ.9.76 லட்சம், 11 பவுன் மோசடி: காா் ஓட்டுநா் கைது

ரூ.3.81 கோடி போலி கடன் மோசடி: தங்க மதிப்பீட்டாளா் கைது
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


