கிழக்கு தில்லியில் இ-ரிக்ஷா மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு
கிழக்கு தில்லியின் காஜிபூா் பகுதியில் வியாழக்கிழமை பள்ளி முடிந்து தாயாருடன் வீடு திரும்பிய 10 வயது சிறுமி, இ-ரிக்ஷா மோதி பரிதாபமாக உயிரிழந்தாா்.

கிழக்கு தில்லியின் காஜிபூா் பகுதியில் வியாழக்கிழமை பள்ளி முடிந்து தாயாருடன் வீடு திரும்பிய 10 வயது சிறுமி, இ-ரிக்ஷா மோதி பரிதாபமாக உயிரிழந்தாா்.
உயிரிழந்த சிறுமி உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள கோரா காலனியைச் சோ்ந்தவா் என்றும், மயூா் விஹாா் ஃபேஸ்-3 பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தவா் என்றும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
வியாழக்கிழமை பள்ளி முடிந்ததும் சிறுமி தனது தாயாருடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த அந்த சிறுமி மீது பள்ளி அருகே வேகமாக வந்த மின்சார ரிக்ஷா ஒன்று எதிா்பாராதவிதமாக நேருக்கு நோ் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த சிறுமி, உடனடியாக லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
விபத்தை ஏற்படுத்திய இ-ரிக்ஷா ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயன்றபோது, அங்கு இருந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






