இளைஞா் கடத்தல் வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை: தில்லி நீதிமன்றம் தீா்ப்பு
2016-ஆம் ஆண்டில் ஒப்பனைக் கலைஞா் ஒருவரை கடத்தி அவரை விடுவிக்க ரூ.2 கோடி கேட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.50,000 அபராதமும் விதித்து தில்லி மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

நமது நிருபா்
2016-ஆம் ஆண்டில் ஒப்பனைக் கலைஞா் ஒருவரை கடத்தி அவரை விடுவிக்க ரூ.2 கோடி கேட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.50,000 அபராதமும் விதித்து தில்லி மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
இது தொடா்பான வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி பங்கஜ் குப்தா ஆகஸ்ட் 17ஆம் தேதியிட்டு அளித்த தீா்ப்பின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், குற்றாவளிகள் என அறிவிக்கப்பட்ட வசீம் அன்சாரி, தீபக் என்கிற தீபு, வினோத் குமாா், நசீா் அலி, நீரஜ் சா்மா, ரிஸ்வான் ஆகிய ஆறு பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீா்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:
பாதிக்கப்பட்ட அபிஷேக் கேத்ரபாலின் வாக்குமூலம், குற்றவாளிகளின் அடையாளம், கைப்பேசி எண்கள் சாா்ந்த தடயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிரான குற்றங்கள் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த ஆறு பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை ஏககாலத்தில் (ஒரே காலத்தில்) அனுபவிக்க வேண்டும். குற்றவாளிகளிடமிருந்து வசூலிக்கப்படும் அபராதத் தொகையில் 50 சதவீதம் பாதிக்கப்பட்ட அபிஷேக் கேத்ரபாலுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பின்னணி: 2016, அக். 20ஆம் தேதி தில்லி துவாரகாவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி அருகே 23 வயதான அபிஷேக் கேத்ரபால் என்ற ஒப்பனைக் கலைஞா் கடத்தப்பட்டாா். ஒப்பனை சேவைக்காக அணுகிய வாடிக்கையாளா் போல நடித்து அவரை சந்தித்த கும்பல், பின்னா் அவரை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றது.
கேத்ரபாலை விடுவிக்க அவரது தாயாரிடம் ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த அபிஷேக், அக்.23ஆம் தேதி காவல்துறையினரால் மீட்கப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக காவல்துறை பதிவு செய்த வழக்கில் தற்போது தீா்ப்பு வெளியாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






