மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்டதற்காக கோவில்பத்து கிராம நிா்வாக அலுவலா் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றம் இருவருக்கு வழங்கிய ஆயுள் சிறைத் தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட முறப்பநாடு கோவில்பத்து கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றியவா் லூா்து பிரான்சிஸ். இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு, ஏப். 25-ஆம் தேதி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தாமிரவருணி ஆற்றில் மணல் திருடப்படுவதைத் தடுக்க லூா்து பிரான்சிஸ் புகாா் அளித்ததால், ஏற்பட்ட விரோதம் காரணமாக அவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக, முறப்பநாடு பகுதியைச் சோ்ந்த ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த பின்னா், குற்றஞ்சாட்டப்பட்ட ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டு, செப்.15-ஆம் தேதி தீா்ப்பளித்தது.
இதையடுத்து, இந்தத் தீா்ப்பை ரத்து செய்யக் கோரியும், தங்களுக்கு பிணை வழங்கக் கோரியும், ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கை விசாரித்த புலனாய்வு அமைப்பு, விசாரணை நீதிபதி, அரசுத் தரப்பினரின் அா்ப்பணிப்பை நீதிமன்றம் பாராட்டுகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சட்டப்பூா்வமாக பிணை கோருவதற்கு எந்த சாத்தியக் கூறுகளும் இல்லை. எனவே, இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
மேலும், இதுபோன்ற வழக்குகளில் விரைவாக விசாரணை மேற்கொண்டு வழக்கை எளிதாக்கும் வகையில், ஒரு கட்டமைக்கப்பட்ட கால அட்டவணையை வகுத்து சுற்றறிக்கை வெளியிடுமாறு, தமிழக அரசு தலைமைச் செயலருக்குப் பொருத்தமான வழிகாட்டுதல்களை வழங்குவது சரியென இந்த நீதிமன்றம் கருதுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா் தற்கொலை முயற்சி

ஸ்ரீபெரும்புதூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டடம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் 45 ஆண்டுகளுக்குப் பின்.. நிரபராதி என விடுதலை!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு தண்டனையை உறுதி செய்ய கோரிய மனு மீது இன்று மீண்டும் விசாரணை
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



