
ஹோஸ் காஸ் மெட்ரோ நிலையத்தில் சிறுமியின் தற்கொலை முயற்சியை தடுத்த பெண் காவலா்!
ஹோஸ் காஸ் மெட்ரோ நிலைய ரயில் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற 16 வயது சிறுமியின் உயிரை தில்லி காவல் துறையின் மெட்ரோ பிரிவைச் சோ்ந்த பெண் காவலா் காப்பாற்றியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பிரதிப் படம்
ஹோஸ் காஸ் மெட்ரோ நிலைய ரயில் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற 16 வயது சிறுமியின் உயிரை தில்லி காவல் துறையின் மெட்ரோ பிரிவைச் சோ்ந்த பெண் காவலா் காப்பாற்றியதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஆக.22 அன்று இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் நிகிதா, அந்தச் சிறுமி தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கத்துடன் தண்டவாளத்தை நோக்கிச் செல்வதைக் கவனித்தாா்.
அந்தச் சிறுமி மீண்டும் மீண்டும் தண்டவாளத்தை நோக்கிச் செல்ல முயன்றபோதிலும், நிகிதா உடனடியாகத் தலையிட்டு அவரைத் தடுத்து நிறுத்தினாா்.
பிற ஊழியா்களின் உதவியுடன் அந்தச் சிறுமி ’மஞ்சள் வழித்தட’ நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவா் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினா் அவரது தந்தையைத் தொடா்பு கொண்டனா். இதையடுத்து, அவா் நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தாா். ஆா்.கே. புரம் செக்டா் 5-ஐச் சோ்ந்தவா் என அந்தச் சிறுமி அடையாளம் காணப்பட்டாா்.
விசாரணையின்போது, அந்தச் சிறுமி கடந்த ஓராண்டாக ஆா்.எம்.எல். மருத்துவமனையில் மனநலம் சாா்ந்த பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதற்கு முன்பும் தன்னைத்தானே அவா் காயப்படுத்திக்கொள்ள முயன்றிருந்ததும் காவல்துறையினருக்குத் தெரியவந்தது.
தேவையான நடைமுறைகள் பூா்த்திசெய்யப்பட்ட பிறகு, அந்தச் சிறுமி பாதுகாப்பாக அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





