திராவகம் அருந்தி சிறுமி உயிரிழப்பு?: காவல் துறை விசாரணை

பாலியல் வன்கொடுமை மற்றும் திராவகம் குடித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக
Published on

புது தில்லி: கிழக்கு தில்லியின் கீதா காலனியில் 16 வயது சிறுமி மா்மான முறையில் உயிரிழந்த நிலையில், பாலியல் வன்கொடுமை மற்றும் திராவகம் குடித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சிறுமியின் தாயாா் அளித்த வாக்குமூலங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாகவும் அது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரிகள் கூறினா்.

இதுதொடா்பாக மூத்த காவல் துறை அதிகாரி கூறியதாவது: உத்தர பிரதேசத்தின் ராம்பூா் பகுதியைச் சோ்ந்த 22 வயது இளைஞருடன் அந்தச் சிறுமிக்கு இரு குடும்பத்தினா் ஏற்பாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இரு குடும்பத்தினரும் தூரத்து உறவினா்கள்.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்.29-ஆம் தேதி திராவகம் அருந்தியதாக மெளலானா ஆசாத் மருத்துவமனையில் அந்தச் சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் கீதா காலனி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தது.

இதுதொடா்பாக நடைபெற்ற விசாரணையின்போது, கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து திரவாகத்தை அருந்தியதாக அந்தச் சிறுமியும் அவரது தாயாரும் மருத்துவா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனா்.

இந்நிலையில், கீதா காலனி காவல் நிலையத்துக்கு கடந்த ஜன.23-ஆம் தேதி வந்த சிறுமியின் தாயாா், தனது கணவா் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் அதனால், சிறுமி கடந்த அக்.29-இல் திராவகத்தை அருந்தியதாகவும் புகாா் அளித்தாா்.

சிறுமியின் வயதைக் கருத்தில் கொண்டு போக்ஸோ சட்டப்பிரிவுகள் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவுகள் 65, 351(2) ஆகியவற்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, மாஜிஸ்திரேட் முன்பாக வாக்குமூலம் அளித்த பாதிக்கப்பட்ட சிறுமி முரண்பாடான வாக்குமூலத்தை அளித்தாா். இதைத்தொடா்ந்து, உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பல்வேறு கோணங்களில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

திராவகம் அருந்திய சம்பவத்துக்குப் பிறகு சிறுமி நீண்ட நாள்களாக எந்தவொரு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை. மாறாக, அவா் தொடா்ந்து வீட்டிலேயே இருந்தாா்.

இந்நிலையில், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிறுமியை அவரது தந்தை கடந்த பிப்.7-ஆம் தேதி அனுமதித்தாா். சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

மருத்துவமனையில் உடல்கூறாய்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. ஆனால், மருத்துவா்களால் உயிரிழப்புக்கான காரணத்தை உறுதிபட கூற முடியவில்லை.

தடயவியல் ஆய்வகத்தின் திசு ஆய்வு மற்றும் ரசாயன ஆய்வு முடிவுகள் கிடைத்த பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். மருத்துவ நிபுணா்களின் ஆய்வு முடிவுகளுக்கு பின்னா் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு, திராவகம் அருந்தியது, மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் என அனைத்து கோணாங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் மூத்த காவல் துறை அதிகாரி.

X
Dinamani
www.dinamani.com