நமது நிருபா்
இந்தூரில் அசுத்தமான தண்ணீரை பருகியதால் ஏற்பட்ட சமீபத்திய இறப்புகளைக் கருத்தில் கொண்டு, தேசியத் தலைநகரில் இதுபோன்ற எந்தவொரு துயர சம்பவத்தையும் தடுக்க கடுமையான சோதனைகளை மேற்கொள்ளுமாறு தில்லி நீா் வாரியத்திற்கு நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
தில்லி அரசு தில்லி நீா் வாரியத்திற்க்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அவை உடனடியாக அமல்படுத்தப்பட உள்ளன.அனைத்து நீா் விநியோக குழாய்களிலும், குறிப்பாக கழிவுநீா் குழாய்களுக்கு அருகில் குடிநீா் குழாய்கள் செல்லும் பகுதிகளில், ஏதேனும் கசிவுகள், சேதங்கள் அல்லது மாசுபாட்டிற்கான சாத்தியமான இடங்களைக் கண்டறிந்து உடனடியாக சரிசெய்ய, வழக்கமான ஆய்வுகளை தீவிரப்படுத்துங்கள் என்று உத்தரவுகள் கூறுகின்றன.
அதிக மக்கள் அடா்த்தி மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் பராமரிப்புக்காக அா்ப்பணிப்புள்ள குழுக்களை நியமிக்க வேண்டும் என்று தில்லி நீா் வாரியத்தின் தலைமை நிா்வாக அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டது.
மற்ற உத்தரவுகளுடன், தில்லி அரசு, தண்ணீா் தரம், மணம், சுவை அல்லது நிறமாற்றம் தொடா்பான பொதுமக்களின் புகாா்களுக்கு உடனடி பதிலளிப்பதை உறுதிசெய்யவும், களத்தில் நேரடி சரிபாா்ப்பு மற்றும் குறுகிய காலத்திற்குள் சரியான நடவடிக்கை எடுக்கவும் நீா் வாரியத்திற்க்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், இந்தூரின் பாகிரத்புரா பகுதியில் அசுத்தமான தண்ணீரை உட்கொண்டதால் குறைந்தது 16 போ் இறந்தனா். இதனால், பலா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.