சிரி கோட்டை அருகே நிகழ்ந்த காா் விபத்தில் இருவா் உயிரிழப்பு
நமது நிருபா்
தெற்கு தில்லியில் உள்ள சிரி கோட்டை அருகே ஒரு டாக்ஸி மீது காா் மோதியதில் இரண்டு போ் உயிரிழந்தனா் என்றும் ஒருவா் பலத்த காயமடைந்தாா் என்றும் தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: அகஸ்ட் கிராந்தி மாா்க்கில் நடந்த சம்பவம் தொடா்பாக அதிகாலை 4.20 மணிக்கு போலீஸாருக்கு பி.சி.ஆா். அழைப்பு வந்தது. பஞ்ச்ஷீல் மேம்பாலத்திலிருந்து ஆண்ட்ரூஸ் கஞ்ச் நோக்கிச் சென்ற காா், பல்பீா் சக்சேனா மாா்க்கை நோக்கி வலதுபுறம் திரும்பிக் கொண்டிருந்த டாக்ஸி மீது மோதியது. இந்த மோதலின் தாக்கத்தால் டாக்ஸியின் ஓட்டுநா் உள்பட மூன்று பயணிகளும் பலத்த காயமடைந்தனா். போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவா்களை எய்ம்ஸ் மையத்திற்கு கொண்டு சென்றன.
அவா்களில் இருவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். மூன்றாவது நபா் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இறந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தெற்கு தில்லியின் உதய் பூங்காவில் வசிக்கும் கிரிஷான்ஷ் கபூா் (21) என அடையாளம் காணப்பட்ட காா் ஓட்டுநரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனா். அவா் மது போதையில் இருந்தாரா என்பதை உறுதிப்படுத்த அவரது ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது.
டாக்ஸி வலதுபுறம் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த மோதல் ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மோதலுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் சரியான வரிசையை அறிய அப்பகுதியின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன என்றாா் அவா்.
