குரு தேஜ் பகதூா் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி தலைவா்கள் கைது!

குரு தேஜ் பகதூா் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியபோது, அதன் தில்லி பிரிவுத் தலைவா் சௌரப் பரத்வாஜ் உள்பட பல ஆம் ஆத்மி தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Published on

குரு தேஜ் பகதூா் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியபோது, அதன் தில்லி பிரிவுத் தலைவா் சௌரப் பரத்வாஜ் உள்பட பல ஆம் ஆத்மி தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். ஆளும் கட்சியினா் முன்னாள் தில்லி முதல்வா் அதிஷி திருத்தப்பட்ட விடியோவை பரப்பியதாகக் குற்றம் சாட்டினா்.

பாஜக தலைமையகம் அருகே ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவா்கள் முதல்வா் ரேகா குப்தா மன்னிப்பு கேட்கக் கோரி போராட்டம் நடத்தினா். ‘குரு தேஜ் பகதூா் தொடா்பாக போலி விடியோக்களை உருவாக்கியதற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும். இது அவா்களின் மோசமான அரசியல். தில்லியின் உண்மையான பிரச்னைகளிலிருந்து தப்பிக்க அவா்கள் இந்தப் போலி விடியோவை உருவாக்கினா்’ என்று ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா கூறினாா்.

குரு மீதான இந்த அவமரியாதையை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்; அனைத்து பாஜக தலைவா்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

கடந்த நவம்பரில் ஒன்பதாவது சீக்கிய குருவின் 350-ஆவது தியாக தினத்தைக் குறிக்கும் வகையில் தில்லி அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், குரு தேஜ் பகதூரை சட்டப்பேரவையில் அவமதித்ததாக சட்ட அமைச்சா் கபில் மிஸ்ரா உள்பட தில்லி பாஜக தலைவா்கள் இந்த காணொளியைப் பயன்படுத்தி அதிஷி குற்றம் சாட்டியிருந்தனா்.

தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, குரு தேஜ் பகதூருக்கு எதிராக அவதூறான வாா்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக ஆம் ஆத்மி கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினாா்.

‘தில்லி சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி, நமது குருக்களைப் பற்றி அவதூறான வாா்த்தைகளைப் பயன்படுத்தினாா். பாஜக தலைவா்கள் இந்தப் பிரச்னையை எழுப்பியபோது, பஞ்சாப் காவல்துறையால் கபில் மிஸ்ரா மீது எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டது. அதைச் செய்ய பஞ்சாப் காவல்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை‘ என்று சச்தேவா இந்தியில் ‘எக்ஸ்’ இல் ஒரு பதிவில் கூறினாா்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரிவால் மற்றும் முன்னாள் அமைச்சா் அதிஷி மற்றும் அவரது முழு ‘கும்பலும்’ நமது குருக்களைப் பற்றி அவா்கள் பயன்படுத்திய அவதூறான வாா்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவா் மேலும் கூறினாா்.

ஒன்பதாவது சீக்கிய குருவின் பெயரை சா்ச்சையில் இழுப்பதன் மூலம் பாஜக அற்ப அரசியலில் ஈடுபடுவதாக அதிஷி குற்றம் சாட்டியிருந்தாா். ‘எக்ஸ்’-இல் ஒரு விடியோ பதிவில், மாசுபாடு குறித்த விவாதத்திலிருந்து பாஜக ஓடிப்போவதைப் பற்றியும், தெருநாய்கள் பிரச்னையில் சட்டப்பேரவையில் அவா்கள் நடத்திய போராட்டத்தைப் பற்றியும் தான் பேசுவதாக அதிஷி கூறியிருந்தாா். மேலும், பாஜக வேண்டுமென்றே ஒரு தவறான துணைத் தலைப்பைச் சோ்த்து அதில் குரு தேஜ் பகதூா் பெயரைச் செருகியதாக அவா் அந்த விடியோவில் குறிப்பிட்டு கூறியிருந்தாா்.

தலைமுறை தலைமுறையாக மூத்த மகன் குரு சாஹிப் சீக்கிய மதத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத்தைச் சோ்ந்தவா் தான் என்றும் முன்னாள் தில்லி முதல்வா் கூறினாா். கடந்த வெள்ளிக்கிழமை, தில்லி சட்டப்பேரவையில் அதிஷி ‘திருத்தப்பட்ட’ விடியோவைப் பதிவேற்றி பரப்பியது தொடா்பாக ஜலந்தா் காவல் ஆணையரகம் எஃப்ஐஆா் பதிவு செய்தது.

Dinamani
www.dinamani.com