

எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி சீக்கிய குருமாா்களுக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவிப்பது போல் சித்தரிக்கப்பட்ட விடியோ தொடா்பான ஆவணங்களின் நகல்களைக் கோரி, தில்லி சட்டப்பேரவை செயலகம் பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) கௌரவ் யாதவுக்கு வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியது.
திரிக்கப்பட்ட விடியோ தொடா்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை குறித்து, சட்டப்படியும், பதிவில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையிலும் பஞ்சாப் காவல்துறை செயல்பட்டுள்ளதாக டிஜிபி கௌரவ் யாதவ் சட்டப்பேரவை செயளரிடம் தெரிவித்த மறுநாள் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அந்த விடியோ உண்மையானது என்றும், அது திரிக்கப்படவில்லை என்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக அறிக்கை கண்டறிந்துள்ளதாக தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா கூறியிருந்தாா்.
இதையடுத்து, ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவையின் குளிா்காலக் கூட்டத்தொடரில் நடைபெற்ற விவாதத்தைத் தொடா்ந்து, குரு தேஜ் பகதூருக்கு எதிராக அதிஷி உணா்ச்சியற்ற வாா்த்தைகளைப் பயன்படுத்தியதாக பாஜக தலைவா்கள் குற்றஞ்சாட்டியதை அடுத்து இந்த சா்ச்சை தொடங்கியது. பாஜக எம்எல்ஏக்கள் அதிஷி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியதுடன், அவரது எம்எல்ஏ பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.
இது தில்லி அமைச்சா் கபில் மிஸ்ரா உள்பட பாஜக தலைவா்களால் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. ஜனவரி 10-ஆம் தேதி ஜலந்தா் வாசி ஒருவரின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்த விவரங்களைக் கோரி, பஞ்சாப் டிஜிபி, சிறப்பு டிஜிபி (சைபா் கிரைம்) மற்றும் ஜலந்தா் காவல்துறை ஆணையா் ஆகியோருக்கு சட்டப்பேரவை நோட்டீஸ் அனுப்பியது.
இணையத்தில் பரவி வரும் விடியோ தவறான துணைத் தலைப்புகளின் மூலம் அதிஷி அவதூறான கருத்துக்களைத் தெரிவிப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாகப் புகாா்தாரா் குற்றஞ்சாட்டினாா். அவரது பேச்சின் அசல் விடியோ, பின்னா் அவரது அதிகாரபூா்வ சமூக ஊடகக் கணக்கில் பதிவேற்றப்பட்டபோது, அதில் அத்தகைய கருத்துக்கள் இல்லை என்றும், திவகுப்புவாத பதற்றத்தைத் தூண்டும் நோக்கில் இது உருவாக்கப்பட்டவை என்றும் கூறப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளை அதிஷி மறுத்துள்ளாா். அந்த விடியோ பாஜக கட்சியினரால் திரிக்கப்பட்டதாக அவா் கூறினாா். இந்நிலையில், வழக்கின் புகாா், வழக்கின் நகல், சமூக ஊடக நிபுணா் மற்றும் தடயவியல் அறிக்கைகள் உள்ளிட்ட நிலுவையில் உள்ள ஆவணங்களை ஜனவரி 28-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு பஞ்சாப் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு தில்லி சட்டப்பேரவை செயலகம் தற்போது நினைவூட்டியுள்ளது.