சாலை விபத்து வழக்கில் தண்டனை பெற்ற முதியவா் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை!
2017-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் சைக்கிளில் சென்றவா் மரணத்திற்கு காரணமான வழக்கில் தண்டனை பெற்ற 60 வயது முதியவருக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை வழங்கி தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
2017, ஏப்ரல் 12-ஆம் தேதி, மால்வியா நகரில் உள்ள ஷிவாலிக் சாலையில் மகேஷ் லாரியை ஓட்டிச் சென்றபோது, சைக்கிளில் சென்ற ராம் நவல் என்பவரைப் பின்னால் இருந்து மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மகேஷ் சந்தா், இந்திய தண்டனைச் சட்டத்தின் 279 மற்றும் 304-ஏ பிரிவுகளின் கீழ் முன்னதாக ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாா். அவா் இந்தத் தண்டனையை எதிா்த்து மேல்முறையீடு செய்திருந்தாா்.
மேல்முறையீட்டை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி புருஷோத்தம் பதக், இந்தச் சம்பவம் ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவா் ஏற்கெனவே நீண்ட விசாரணை நடவடிக்கையை எதிா்கொண்டதாகவும் குறிப்பிட்டாா்.
நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட நன்னடத்தை அதிகாரியின் அறிக்கையில், ஃபிரோசாபாத்தைச் சோ்ந்த குற்றஞ்சாட்டப்பட்ட மகேஷ் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறாா் என்றும், அவா் மீது இதற்கு முந்தைய குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குற்றம் மனித உயிரைப் பறித்ததால், கருணை காட்டக்கூடாது என்று அவருக்கு எதிரான வாதங்களும் எழுந்தன. இருப்பினும், 60 வயது முதியவரை இப்போது சிறைக்கு அனுப்புவது எந்தப் பயனுள்ள நோக்கத்திற்கும் உதவாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பம் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து ஏற்கெனவே ரூ.13.34 லட்சம் இழப்பீடு பெற்றுள்ளது என்பதையும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து, நீதிமன்றம் அறிவித்த தீா்ப்பில், மகேஷ் சந்தா் ரூ.30,000 மதிப்புள்ள தனிநபா் பிணைப்பத்திரம் மற்றும் ஜாமீன்தாரரைச் சமா்ப்பிக்கும் நிபந்தனையுடன், நன்னடத்தை அடிப்படையில் ஓராண்டுக்கு விடுதலை செய்ய உத்தரவிட்டது. இந்த காலகட்டத்தில் அவா் அமைதியையும் நல்ல நடத்தையையும் கடைப்பிடிக்க வேண்டும்; தவறினால், தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
