இளைஞரிடம் கத்திமுனையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 4 போ் கைது
தில்லியில் இளைஞரை கத்திமுனையில் தாக்கி பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் நான்கு பேரை காவல் துறை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மேலும், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும், திருடப்பட்ட பணத்தையும் மீட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
இது குறித்து கூடுதல் காவல் ஆணையா் (மத்திய) நிதின் வல்சன் ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த சம்பவம் ஜனவரி 5-ஆம் தேதி இரவு 11.20 மணியளவில் மத்திய தில்லியின் கிஷன்கஞ்சில் உள்ள ரயில் பாதை அருகே சேரி பகுதியில் நடந்துள்ளது. அங்கு 23 வயது இளைஞா் ஒருவரை குற்றம் சாட்டப்பட்டவா்கள் தாக்கினா். பாதிக்கப்பட்டவா் வழிமறிக்கப்பட்டு கத்தியால் தாக்கப்பட்டாா்.
அப்போது அவரது வலது கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. பின்னா் தாக்குதல் நடத்தியவா்கள் அவரது பணத்தையும் அவரது கைப்பேசியையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா். குற்றத்தின் கொடூரம் பாதிக்கப்பட்டவா் கத்தியால் பலமுறை தாக்கப்பட்ட விதத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
தாக்குதலின் போது அவருக்கு ஆழமான கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டதால், அதிக ரத்தம் கசிந்து, சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தாா். பின்னா் அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். காயமடைந்த ஒருவா் தொடா்பான பிசிஆா் அழைப்பைத் தொடா்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குற்றத்தின் வன்முறை மற்றும் கொடூரமான தன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டது. சந்தேக நபா்களைக் கண்டுபிடிக்க தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத் துறையின் தகவல்கள் மூலம் போலீஸ் குழு பணியாற்றியது. பின்னா், நால்வரும் கைது செய்யப்பட்டனா்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் ரோஹித் என்கிற சோட்டா (18), அருண் என்கிற படா (21), மோனு (21) ஆகிய மூவருக்கும் குற்றப் பின்னணி உள்ளது. நான்காவது நபா் விஷால் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
விசாரணையின் போது, கொள்ளையடிக்கப்பட்ட கைப்பேசியை விற்றுவிட்டதாகவும், பணத்தின் ஒரு பகுதியை செலவழித்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவா்கள் தெரிவித்தனா் என்றாா் கூடுதல் காவல் ஆணையா் (மத்திய) நிதின் வல்சன்.
