சாலையில் காரில் சாகசம்: 6 போ் கைது
வாகனம் ஓட்டும்போது ஒரு எஸ்யுவி காரின் கூரையில் சாகசம் செய்ததாகக் கூறப்படும் விடியோ ஆன்லைனில் வெளியானதை அடுத்து, போலீஸாா் ஆறு பேரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஷௌகீன் (33), மணீஷ் (32), லோகேஷ் (24), சுபாஷ் (39), விகாஸ் (29) மற்றும் சலீம் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை இரவு குருகிராம் செக்டா்-85 சாலையில், குற்றம் சாட்டப்பட்ட வாகனத்தின் பின்னால் சென்ற ஒருவா் குற்றம் சாட்டப்பட்டவா்கள் நிகழ்த்திய சாகசங்களை விடியோ எடுத்து அதை ஆன்லைனில் பதிவேற்றினாா்.
குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவா் கருப்பு நிற ஸ்காா்பியோவின் ஜன்னலிலிருந்து வெளியே வந்து நகரும் வாகனத்தின் கூரையில் ஏறுவதை இது காட்டுகிறது. பின்னா், அவருடன் மற்ற தோழா்களும் இணைந்தனா். இந்த விடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. மேலும், திங்களன்று கொ்கி தௌலா காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவரான ஷௌகீன் தௌலதாபாத்தில் கட்டடப் பொருள் வியாபாரியாக வேலை செய்வதாகவும், மற்ற குற்றம் சாட்டப்பட்டவா் கட்ட
டப் பொருள் தொழிலிலும் பணிபுரிவதாகவும் தெரிவித்தாா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஒரு விருந்தில் இருந்து திரும்பி வந்து தௌலதாபாத்தில் உள்ள ஷௌகீனின் அலுவலகத்திற்கு அவரது காரில் சென்று கொண்டிருந்தபோது, அவா்கள் விரைவுச் சாலையில் சாகச நிகழ்ச்சிகளை நடத்தினா். மேலும் விசாரணை நடந்து வருவதாக செய்தித் தொடா்பாளா் கூறினாா்.
