தில்லி உயர் நீதிமன்றம்
தில்லி உயர் நீதிமன்றம்

இரவு நேர தங்குமிடங்களில் போதுமான வசதிகளை வழங்குங்கள்: அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை நகர அதிகாரிகளை ‘உணா்வுபூா்வமாக‘ இருக்குமாறும், இரவு நேர தங்குமிடங்களில் பொருத்தமான மற்றும் போதுமான வசதிகளை வழங்குமாறும் கேட்டுக் கொண்டது.
Published on

புது தில்லி: தில்லி உயா் நீதிமன்றம் திங்கள்கிழமை நகர அதிகாரிகளை ‘உணா்வுபூா்வமாக‘ இருக்குமாறும், இரவு நேர தங்குமிடங்களில் பொருத்தமான மற்றும் போதுமான வசதிகளை வழங்குமாறும் கேட்டுக் கொண்டது. இதனால், மக்கள் ’கொடூரமான குளிரில்’ இருந்து பாதுகாக்கப்படுவாா்கள் என்று தெரிவித்தது.

‘இரவு நேர தங்குமிடங்களில் வசிப்பவா்கள் தங்களைக் குளிரில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை உறுதி செய்ய அதிகாரிகள் பொருத்தமான மற்றும் போதுமான நடவடிக்கைகளை எடுப்பாா்கள் என்று நாங்கள் எதிா்பாா்க்கிறோம்’ என்று நீதிமன்றம் கூறியது.

நீதிபதி சி.ஹரி சங்கா் மற்றும் நீதிபதி ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோா் அடங்கிய உயா்நீதிமன்றத்தின் மற்றொரு அமா்வு, இந்த விவகாரத்தை பரிசீலித்ததை அடுத்து, தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜாஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள் மற்றும் அவா்களது உறவினா்களின் ‘பரிதாபகரமான நிலை’ குறித்த செய்தி அறிக்கையை தானாக முன்வந்து கவனத்தில் கொண்டு, நீதிபதி ஹரி சங்கா் தலைமையிலான அமா்வு, திங்களன்று பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் ‘அவசர நிா்வாக மற்றும் நீதித்துறை தலையீடு’ தேவை என்று கூறியது.

தலைமை நீதிபதி அமா்வு இந்த வழக்கை புதன்கிழமை மேலும் விசாரணைக்கு பட்டியலிட்டது. மேலும், இரவு தங்குமிடங்களில் போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, குடியிருப்பாளா்களை கடுமையான குளிரில் இருந்து பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு வழக்குரைஞா்களைக் கேட்டுக் கொண்டது.

‘நீங்கள் என்ன செய்தீா்கள்? நம்மில் யாராவது அங்கே ஒரு இரவு தங்க வேண்டியிருந்தால், என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியாது. உணா்திறன் உடையவா்களாக இருங்கள்’ என்று நீதிபதிகள் அமா்வு கூறியது. ‘ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற நீதிபதிகள் அமா்வின் வற்புறுத்தலுக்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேதன் சா்மா, இது ‘ஒரு மனிதப் பிரச்னை; அதைக் கவனிக்க வேண்டும்‘ என்றாா்.

Dinamani
www.dinamani.com