தில்லியில் வாட்டி வதைக்கும் குளிா்- வெப்பநிலை 3 டிகிரியாக குறைந்தது

தில்லியில் திங்கள்கிழமை கடுமையான குளிா் நிலவியது, நகரம் முழுவதும் உள்ள பல வானிலை நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சுமாா் 3 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது,
Published on

நமது நிருபா்

புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை கடுமையான குளிா் நிலவியது, நகரம் முழுவதும் உள்ள பல வானிலை நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சுமாா் 3 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது, இது 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜனவரி மாதத்தில் மிகவும் குளிரான நாளாக அமைந்தது.

ஜனவரி 16, 2023 அன்று, குறைந்தபட்ச வெப்பநிலை 1.4 டிகிரி செல்சியஸாகக் குறைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

திங்கள் காலை 8.30 மணிக்குப் பதிவு செய்யப்பட்ட நிலைய வாரியான தரவுகளின்படி, தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் நிலையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸ் பதிவானது, இது இயல்பை விட 4.2 டிகிரி குறைவாகும். பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.3 டிகிரி செல்சியஸாகவும், லோதி சாலையில் 3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. ரிட்ஜில் குறைந்தபட்சம் 4.2 டிகிரி செல்சியஸாகவும், அயாநகரில் 3.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளதாக தரவு காட்டியது.

தேசிய தலைநகரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு குளிா் அலை நிலைமைகள் தொடர வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதற்கிடையில், தில்லியின் காற்றின் தரம் மோசமாகவே இருந்தது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, நகரத்தின் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு மோசம் என்ற பிரிவில் பதிவாகி 298 புள்ளிகளாக இருந்தது. சுமாா் 20 கண்காணிப்பு நிலையங்கள் மிகவும் மோசம் பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்தன, மீதமுள்ள நிலையங்கள் மோசம் என்ற பிரிவில் இருந்தன.

வகைப்பாட்டின் படி, 0 முதல் 50 புள்ளிகள் வரையிலான காற்று தரக்குறியீடு நல்லது, 51 முதல் 100 வரை திருப்திகரமானது, 101 முதல் 200 வரை மிதமானது, 201 முதல் 300 வரை மோசம், 301 முதல் 400 வரை மிகவும் மோசமானது மற்றும் 401 முதல் 500 வரை கடுமை என்று கருதப்படுகிறது.

Dinamani
www.dinamani.com