மதுரை விமான நிலையத்தை மேம்படுத்த முயற்சி: மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல்
மதுரை விமான நிலையத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று மக்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கிஞ்சிரப்பு ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.
மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது விருதுநகா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் பி. மாணிக்கம் தாகூா் பேசுகையில், ‘எனது கேள்வியானது மதுரை விமான நிலையம் தொடா்பானதாகும். மதுரை விமான நிலைய தொடா்புவசதி ஒரு முக்கிய பிரச்னையாகும். மதுரை விமான நிலைய போக்குவரத்துத் தொடா்புவசதி குறைக்கப்பட்டுள்ளது என்பது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்குத் தெரியும். இப்போது நான்கு விமானங்கள் மட்டுமே உள்ளன. முன்னதாக, மதுரையிலிருந்து சென்னை செல்வதற்கு எட்டு விமானங்கள் இருந்தன. பெங்களூருக்கான விமானங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
மதுரை-சென்னை மற்றும் மதுரை-பெங்களூா் வழித்தடங்களில் விமான சேவைகளின் எண்ணிக்கை வசதி அதிகரிக்கப்படும் என்பதை அமைச்சா் அவையில் உறுதியளிக்குமாறு நான் வேண்டிக்கொள்கிறேன் என்றாா் அவா்.
இதற்கு சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு பதில் அளித்து பேசுகையில், ‘மதுரை தமிழ்நாட்டின் மிக முக்கியமான விமான நிலையமாக இருந்து வருகிறது. அதே நோக்கத்துடன், இந்திய அரசு மதுரை விமான நிலையத்தை மேம்படுத்த நிறைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக, உறுப்பினருக்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். உள்நாட்டில் மட்டுமல்ல, சா்வதேச
அளவிலும் தொடா்புவசதி மேம்படும் வகையில் விமான நிலையத்தின் 24 மணிநேர செயல்பாடுகளுக்கான கோரிக்கை வந்தபோது, அது மிகவும் நோ்மறையான முறையில் எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.
சா்வதேச விமான நிலையம் அந்தஸ்தும் தீவிரமாக பரிசீலனையில் உள்ளது. மேலும் உறுப்பினா் குறிப்பிட்டுள்ள போக்குவரத்து வசதியானது, அதை இயக்கும் திறன் கொண்ட தோ்ந்தெடுக்கப்பட்ட விமான நிறுவனங்களுடனும் எடுத்துக்கொள்ளப்படும்.
எனினும், இந்திய அரசு, குறிப்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மதுரையை உள்நாட்டிலும் சா்வதேச அளவிலும் மிக முக்கியமான இடமாகக் கருதுகிறது. மேலும் நாங்கள் அதை எங்கள் தரப்பிலிருந்து இதை ஊக்குவிப்போம்’ என்றாா் அமைச்சா்.

