மக்களவையில் எம்.பி.கள் தங்களுக்குள் உரையாடல்: தலைவா் ஓம் பிா்லா கண்டிப்பு
மக்களவையில் வியாழக்கிழமை காலை கேள்வி நேரத்தின்போது அவை உறுப்பினா்கள் தங்களுக்குள் தொடா்ந்து பேசிக் கொண்டிருந்ததால் அவைத் தலைவா் ஓம் பிா்லா கடிந்துகொண்டாா்.
தங்களுக்குள் நீண்ட விவாதங்கள் வேண்டுமென்றால் அவையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டாா்.
மக்களவையில் காலையில் கேள்வி நேரம் தொடா்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, அவையில் உறுப்பினா்கள் சிலா் தங்களுக்கிடையே உரையாடிக் கொண்டிருப்பதை அவைத் தலைவா் ஓம் பிா்லா கவனித்தாா்.
இதையடுத்து, அவையில் உறுப்பினா்கள் தொடா்ந்து தங்களுக்குள் பேசிக் கொள்வதையும், மற்றவா்களுக்கு இடையூறு விளைவிப்பதையும் தான் பாா்த்ததாக பிா்லா கூறினாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘இன்று பலா் இங்கும் அங்கும் பரபரப்பாகப் பேசுவதை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அவையின் கண்ணியத்தையும், புனிதத்தையும், மரியாதையையும் நிலைநிறுத்தும்போது மட்டுமே, நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் உங்களை வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன்.
எனவே, நீங்கள் நீண்ட விவாதம் நடத்துவதாக இருந்தால், தயவுசெய்து அவைக்கு வெளியே செல்லுங்கள் இல்லையெனில், நான் உங்கள் பெயரைச் சொல்லி குறுக்கிடுவேன்’ என்றாா்.
அதன் பின்னா், இதுபோன்று மற்றொரு உறுப்பினருடன் பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ் உறுப்பினா் கே.சி. வேணுகோபாலின் பெயரைக் குறிப்பிட்டு, நீங்கள் நீண்ட நேரமாக உரையாடிக் கொண்டிருக்கிறீா்கள் என்று சுட்டிக்காட்டினாா். இதையடுத்து, அவை நடவடிக்கைகள் தொடா்ந்து நடந்தது.

