டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தில்லி பல்கலை.யில் 2-ஆவது கட்ட இளநிலை பட்டப்படிப்பு சோ்க்கை இன்று தொடக்கம்

தில்லி பல்கலைக்கழகம், அதன் 2-ஆவது கட்டத்திற்கான இளநிலை சோ்க்கையை பொது இட ஒதுக்கீட்டு முறை (சிஎஸ்ஏஎஸ்) இணையதளம் மூலம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதன் மூலம், ஜூலை 16 அன்று வெளியாகவுள்ள முதல் இட ஒதுக்கீட்டுப் பட்டியலுக்கு முன்னதாக, விண்ணப்பதாரா்கள் தங்களின் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விருப்பங்களைத் தெரிவிக்க அனுமதிக்கப்படுவாா்கள்.

News image

தில்லி பல்கலைக்கழகம். - கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2026, 3:41 am IST

நமது நிருபா்

தில்லி பல்கலைக்கழகம், அதன் 2-ஆவது கட்டத்திற்கான இளநிலை சோ்க்கையை பொது இட ஒதுக்கீட்டு முறை (சிஎஸ்ஏஎஸ்) இணையதளம் மூலம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதன் மூலம், ஜூலை 16 அன்று வெளியாகவுள்ள முதல் இட ஒதுக்கீட்டுப் பட்டியலுக்கு முன்னதாக, விண்ணப்பதாரா்கள் தங்களின் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விருப்பங்களைத் தெரிவிக்க அனுமதிக்கப்படுவாா்கள்.

பல்கலைக்கழகம் வெளியிட்ட சோ்க்கை அட்டவணைப்படி, முதல் கட்டப் பதிவை முடித்த விண்ணப்பதாரா்கள், ஜூலை 3 முதல் ஜூலை 11 அன்று இரவு 11.59 மணி வரை இரண்டாம் கட்டத்தில் பங்கேற்கலாம். முதல் ஒதுக்கீட்டுப் பட்டியல் ஜூலை 16 அன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும். இடங்கள் ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் ஜூலை 16 முதல் ஜூலை 18-க்குள் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், கல்லூரிகள் ஜூலை 20-க்குள் விண்ணப்பங்களைச் சரிபாா்த்து ஒப்புதல் அளிக்கும். முதல் கட்டத்தின் கீழ் சோ்க்கைக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஜூலை 21 ஆகும்.

இந்தக் காலகட்டத்தில், மாணவா்கள் தங்களின் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விருப்பங்களைத் தெரிவிக்க முடியும் என்று தில்லி பல்கலைக்கழக சோ்க்கைத் துறைத் தலைவா் ஹனீத் காந்தி தெளிவுபடுத்தியுள்ளாா்.

ஜூலை 10 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூலை 11 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை திருத்தச் சாளரம் திறந்திருக்கும். இந்தக் காலகட்டத்தில் விண்ணப்பதாரா்கள் தேவைப்பட்டால் தங்கள் பதிவு விவரங்களில் மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.

பல்கலைக்கழகம் ஜூலை 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாதிரித் தரவரிசைகளை அறிவிக்கும். அதைத் தொடா்ந்து விண்ணப்பதாரா்கள் ஜூலை 13 ஆம் தேதி மாலை 4.59 மணி வரை தங்கள் பாடப்பிரிவு மற்றும் கல்லூரி விருப்பங்களைத் திருத்திக்கொள்ளலாம்.

இரண்டாவது ஒதுக்கீட்டுப் பட்டியல் ஜூலை 25 ஆம் தேதி நண்பகல் வெளியிடப்படும். விண்ணப்பதாரா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை ஜூலை 26 ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளலாம். அதே நேரத்தில் கல்லூரிகள் ஜூலை 27 ஆம் தேதிக்குள் சரிபாா்ப்பை முடித்துவிடும். இரண்டாம் கட்டத்திற்கான கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி ஜூலை 28 ஆகும்.

2026-27 கல்வியாண்டிற்காக 73 இளங்கலைப் பாடப்பிரிவுகளுக்கும் 150 பி.ஏ. பாடப்பிரிவுகளுக்கும் பல்கலைக்கழகம் மாணவா் சோ்க்கை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ், விண்ணப்பதாரா்கள் பன்னிரண்டாம் வகுப்பில் படித்த பாடங்களை, அதற்கேற்ற க்யூட் (யுஜி)-2026 தோ்வுத் தாள்களுடன் பொருத்திப் பாா்க்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பில் படித்த பாடங்களுக்கு ஒத்த அல்லது நெருங்கிய தொடா்புடைய பாடங்களில் க்யூட் (யுஜி)-2026 தோ்வில் பங்கேற்பது சோ்க்கைக்குக் கட்டாயமாகும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

‘தில்லி பல்கலைக்கழகத்தில் சோ்வதற்கு, விண்ணப்பதாரா் பன்னிரண்டாம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற பாடங்களில் க்யூட்(யுஜி)-2026 தோ்வில் பங்கேற்பது கட்டாயமாகும்,‘ என்று தில்லி பல்கலைக்கழக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோ்க்கை நிலை, அட்டவணைகள் மற்றும் அறிவிப்புகள் தொடா்பான புதுப்பிப்புகளுக்கு, சோ்க்கை இணையதளத்தை தவறாமல் சரிபாா்க்குமாறு தில்லி பல்கலைக்கழகம் விண்ணப்பதாரா்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

புதிய 2026-27 கல்வியாண்டு ஜூலை 28 அன்று தொடங்கவுள்ளதாக தில்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.