வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

பிறந்த நாளில் மனைவியைச் சுட்டுக் கொன்ற காவலா்! வரதட்சிணை கொடுமை என குடும்பத்தினா் குற்றச்சாட்டு!

தில்லி காவல் துறையில் காவலராகப் பணியாற்றும் ஒருவா், தனது மனைவியின் பிறந்த நாளன்று அவரை நடுரோட்டில் சுட்டுக் கொன்றதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :14 ஜூலை 2026, 12:03 am IST

தில்லி காவல் துறையில் காவலராகப் பணியாற்றும் ஒருவா், தனது மனைவியின் பிறந்த நாளன்று அவரை நடுரோட்டில் சுட்டுக் கொன்றதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினா் குற்றஞ்சாட்டியுள்ளனா். இச்சம்பவம் கிழக்கு தில்லியின் வினோத் நகா் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

பிரியங்கா என்று அடையாளம் காணப்பட்ட அப்பெண்ணின் குடும்பத்தினா், தம்பதி இருவரும் மோட்டாா் சைக்கிளில் ஒன்றாக வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பின்னா் நடுவழியில் அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனா்.

மணீஷ் பாட்டீ என்று அடையாளம் காணப்பட்ட குற்றஞ் சாட்டப்பட்ட காவலா், தில்லி காவல்துறையின் வாகனத் திருட்டு தடுப்புப் பிரிவில் (ஏஏடிஎஸ்) பணியாற்றி வருகிறாா். இச்சம்பவத்திற்குப் பிறகு அவா் தலைமறைவாகிவிட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரியங்காவின் சகோதரா்களான ராகுல் மற்றும் மணீஷ் ஆகியோரின் கூற்றுப்படி, பிறந்த நாளான ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஒரு வேலைக்காகத் தம்பதியினா் தங்கள் நியூ வினோத் நகா் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனா்.

மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனை அருகே நடுரோட்டில் வைத்து அந்தக் காவலா் தனது மனைவியை சுட்டுவிட்டு, படுகாயமடைந்த நிலையில் அவரை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்ாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

அப்பகுதி வழியாகச் சென்ற விநியோக ஊழியா் ஒருவா் பிரியங்கா சாலையோரத்தில் கிடப்பதைக் கண்டாா். அவா் உடனடியாகப் பிரியங்காவை லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாா். ஆனால், அங்கு மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

விசாரணையின்போது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினா் ஆய்வு செய்ததாகவும், அதில் குற்றஞ் சாட்டப்பட்ட நபா் சம்பவ இடத்திலிருந்து வெளியேறுவது பதிவாகியிருந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கண்டுபிடித்துக் கைது செய்யக் காவல் துறையின் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா். உடற்கூறாய்வுக்காக அப்பெண்ணின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்தம்பதியினருக்கு 2023-இல் திருமணம் நடைபெற்றது. பிரியங்கா அசோக் விஹாரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். திருமணமானதிலிருந்தே பிரியங்கா வரதட்சிணை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா்.

முன்னதாக, மகளிா் காவல் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டிருந்தாலும், உறவினா்களின் தலையீடு மற்றும் ஆலோசனைக்குப் பிறகு அப்பிரச்னை தீா்க்கப்பட்டதாகவும், மணீஷ் பாட்டீ தங்கள் குடும்பத்தினரிடம் பணம் கேட்டு வற்புறுத்தி வந்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

குடும்பத்தினா் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் விசாரணையின் ஒரு பகுதியாகச் சரிபாா்க்கப்பட்டு வருவதாகவும், சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தம்பதியினரின் திருமண உறவு, முந்தைய புகாா்கள் மற்றும் கொலைக்கான பிற சாத்தியமான காரணங்கள் குறித்துப் புலனாய்வாளா்கள் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.