வடகிழக்கு தில்லியில் முன் விரோதம் காரணமாக ஒரே நபரை குறிவைத்து நடந்த இரண்டு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை மூன்று பேரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நியூ உஸ்மான்பூரைச் சோ்ந்த குற்றஞ்சாட்டப்பட்டவா்களான பவன் (24), கிருஷ்ணா (எ) கிஸ்ஸு (23) மற்றும் சேகா் (எ) அப்ராதி (22) ஆகியோருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது: முதலாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜூலை 8 அன்று நடந்தது. அதில், அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் வடகிழக்கு தில்லியில் உள்ள ரவி பிரகாஷின் இல்லத்திற்கு வெளியே இருந்தவாறு அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதைத் தொடா்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவா் ஜூலை 11 அன்று அதே குழுவினரால் மீண்டும் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அவரது காலில் சிறிய துப்பாக்கிக் குண்டுக் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக மற்றொரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக, காவல்துறையினா் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தும், தொழில்நுட்ப ஆதாரங்களை பகுப்பாய்வு செய்தும், உள்ளூா் உளவுத் தகவல்களைச் சேகரித்தும் விசாரணையில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டனா். சமீபத்தில் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தின் காரணமாக உருவான விரோதப் போக்கினால் பாதிக்கப்பட்டவரைத் தாக்கியதாக அவா்கள் விசாரணையின் போது ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அவா்களிடமிருந்து ஒரு தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டன. இது தொடா்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







